சைக்கிளிங் போட்டியில் சாதிக்கும் 'ஆட்டிசம்' மாணவர்! 'உடல் ஊனம் தடையில்லை' என்பதற்கு உதாரணம்

'ஆட்டிசம்' என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு. இதில், மன இறுக்கம் மற்றும் அது சார்ந்த கோளாறுகளும் அடங்கும். ஆழ்ந்த அறிவுசார் இயலாமையும், கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களில் காணப்படுகிறது. அதேசமயம், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு திடமான நம்பிக்கையும், உடற்பயிற்சியும் அளித்தால் அவர்களை 'சகலகலா வல்லவன்' ஆக்க முடியும்.
இப்படி, கோவையை சேர்ந்த அறிவுசார் மாற்றுத்திறனாளியான சஷாங் சரவணன், தனது தந்தையின் தீர்க்கமான நம்பிக்கையால் சைக்கிளிங் போட்டிகளில் அசத்திவருகிறார். புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளியில், 9ம் வகுப்பு செல்லும் இம்மாணவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்துள்ளார்.
இவரது தந்தை சரவணக்குமார் தனியார் நிறுவன ஊழியர். தாய் சித்ரா இல்லத்தரசி. இச்சூழலில், உள்ளூர் சைக்கிளிங் போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற சஷாங் சரவணன், சமீபத்தில் ஹைதராபாத்தில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு நடந்த 'பாரா நேஷனல் ரோடு சைக்கிளிங்' போட்டியில், 12 கி.மீ., துாரத்தை முடித்து ஐந்தாம் இடம் பிடித்துள்ளார்.
தமிழக அணிக்காக பங்கேற்ற ஒரே வீரரான இவர், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அசத்தியுள்ளார். பொள்ளாச்சி விழாவில் இடம்பெற்ற, 25 கி.மீ., ரோடு சைக்கிளிங் போட்டியிலும், 'டெக்கத்லான்' 20 கி.மீ., போட்டியிலும் பங்கேற்று பதக்கங்கள் பெற்றுள்ளார்.
மாணவரின் தந்தை சரவணன் கூறுகையில்,''எனது மகன் மூன்று ஆண்டுகளாக சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரது பயிற்சியாளர் கதிர் வாரத்துக்கு மூன்று நாட்கள் பயற்சியுடன் தன்னம்பிக்கை அளித்துவருகிறார். தற்போது, போட்டிகளுக்கு செல்ல செலவு அதிகரித்துவருகிறது.
எனது சம்பளத்தில்தான் அனைத்தையும் கவனித்துவருகிறேன். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இதுபோன்ற போட்டிகள் அதிகம் நடத்தப்படுவதில்லை. எனவே, இம்மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த போட்டிகள் நடத்துவதுடன், ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்,'' என்றார்.
சாதிப்பதற்கு வயதும் தடையில்லை, உடல் ஊனமும் தடையில்லை. மனமும், விடாமுயற்சியும் இருந்தால் எப்போதும்,எந்த நிலையிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் சஷாங் சரவணன்.
மேலும்
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 204 ரன்கள் இலக்கு
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!