அரசின் திட்டங்களுக்கு கணக்கு; கூட்டுறவு வங்கிகளில் அபாரம்

கோவை; அரசின் திட்டங்களில் கணக்கு துவங்கிய வகையில், கூட்டுறவு வங்கிகளில், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சிறப்பிடம் பெற்றுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், 'தமிழ்ப் புதல்வன்' திட்டம், 'புதுமைப் பெண்' திட்டம் ஆகியவற்றில் பயன்பெறும் வகையில், பயனாளிகளுக்கு கணக்கு துவங்க, தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் 39 கிளைகள் வாயிலாக மேற்கொண்ட நடவடிக்கையால், 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தில், திட்டம் துவங்கியது முதல், கடந்த பிப்., மாதம் வரை, 6,268 கணக்குகள் துவங்கப்பட்டு, மாநில அளவில், முதலிடம் பிடித்துள்ளது. இதில், 3.73 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கிளைகள் வாயிலாக, 76 ஆயிரத்து 319 கணக்குகள் துவங்கி முதலிடத்தில் உள்ளது. தர்மபுரி மாவட்டம், 74 ஆயிரத்து 640 கணக்குகள், திருச்சி மாவட்டம் 61 ஆயிரத்து 315 கணக்குகள், கோவை மாவட்டம் 52 ஆயிரத்து 720 கணக்குகள் என, அடுத்தடுத்த இடம் பிடித்துள்ளன. கோவை மாவட்டத்தில், இத்திட்டத்தில் 93.24 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

'புதுமைப் பெண்' திட்டத்தில், தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கிளைகள் வாயிலாக, 1,379 கணக்குகள், திண்டுக்கல் மாவட்டம், 1,129 கணக்குகள், கோவை மாவட்டம் 1,029 கணக்குகள் என, முதல் மூன்று இடங்களில் உள்ளன.

Advertisement