அரசு துறை சேவைகளின் எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு: கூடுதலாக 171 திட்ட விண்ணப்பங்கள் சேர்ப்பு

புதுச்சேரி: பொது சேவை வாயிலாக அளிக்கப்படும் அரசின் சேவைகள் 171 கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இச்சேவைக்கான கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பொது சேவை மையங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது 77 அரசு துறை சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பட்டா, புலம்பட நகல், வில்லங்கம், பிறப்பு, இறப்பு உள்ளிட்ட ஐந்து சேவைகள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் மீண்டும் அரசு துறைகளுக்கு பொதுமக்கள் நாடி செல்லுகின்றனர். கூட்டமும் பல்வேறு அரசு துறைகளில் அலைமோதுகின்றது.
இந்நிலையில் 13 அரசு துறைகளின் 171 சேவைகள் பொது சேவை மையங்களில் கூடுதலாக வழங்க அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் பொதுசேவை மையங்களில் வழங்கப்படும் அரசு துறை சேவைகளில் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, போக்குவரத் துறையின் 58 சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்து மீன்வளத் துறையில் -39, வேளாண் துறை-24, குடிமை பொருள் வழங்கல் துறை-14, உள்ளாட்சித் துறை-5, பத்திர பதிவு துறை-4, சமூக நலத் துறை-7, நகர அமைப்பு திட்டமிடல் துறை-3, மகளிர் மேம்பாட்டுத் துறை-8, நிலத்தடி நீர் ஆணையம்-3, மின் துறை-4, நிர்வாக சீர்த்துறை-1, கல்வித் துறை-1 என 171 அரசு துறை சேவைகள் பொது சேவை மையங்களில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த அரசின் சேவைகளுக்கான பொது சேவை மைய கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
வேளாண் துறையின் அனைத்து சேவைகளுக்கும் ரூ.10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையை பொருத்தவரை ஓட்டுனர் பழங்குநர் உரிமம், மறு பதிவெண், நகல் பதிவெண் பதிவு சேவைகளுக்கு குறைந்தபட்சம் ரூ.40 முதல் ரூ.60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் அங்கீகாரத்திற்காக இனி பொதுசேவை மையம் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அரசு வேலைவாய்ப்பிற்கு பொது சேவை மையம் மூலமாகவும் இனி விண்ணப்பிக்க முடியும். இதற்கும் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
பத்திர பதிவுக்கு துறையின் இணையதளம் மூலமாக மட்டுமின்றி, பொது சேவை வாயிலாகவும் இனி விண்ணப்பிக்க முடியும்.
இதேபோல் திருமண பதிவிற்கும் பொது சேவை மையம் வாயிலாக முன் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கும் ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரிரு தினங்களில் அதிகாரபூர்வமாக ஐ.டி.,-வருவாய் துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகிறது.