போர் விமானம் விழுந்து விமானி பலி

1

ஜாம்நகர்; குஜராத்தில் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த விமானி பலியானார்; மற்றொரு விமானி படுகாயமடைந்தார்.

குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தில் இருந்து ஜாகுவார் ரக போர் விமானம் நேற்று முன்தினம் இரவு பயிற்சியில் ஈடுபட்டது. இரட்டை இன்ஜின் உடைய, இரண்டு பேர் பயணிக்கும் இந்த போர் விமானத்தில், இரண்டு விமானிகள் பயணித்தனர்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து விலகி, யாரும் இல்லாத இடத்தில், விமானத்தை பத்திரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்தனர்.

இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து, தீப்பிடித்தபடி சுவர்தா கிராமத்தின் வயல்வெளியில் இரவு 9:30 மணிக்கு விமானம் விழுந்தது. முன்னதாக, அதிலிருந்த விமானி ஒருவர், வெளியே குதித்து சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

மற்றொருவரின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் தீயில் கருகி உயிரிழந்ததை விமானப் படை உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த பகுதியை விமானப் படை உயரதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டனர். விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement