தனியார் நிறுவன ஊழியரிடம் லேப்டாப், ஐபேட் திருடியவர் கைது

புதுச்சேரி: ரயில் நிலையத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் லேப் டாப், ஐபேட் திருடிய சீர்காழி வாலிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 34; தனியார் நிறுவன ஊழியர். புதுச்சேரி வந்திருந்த இவர், கடந்த 30ம் தேதி மீண்டும் அரக்கோணம் செல்ல புதுச்சேரி ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது, இவரது இரண்டு லேப் டாப், ஐபேட் வைத்திருந்த பேக்கை மர்ம நபர் திருடி சென்றார். விக்னேஷ் புகாரின் பேரில், ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.வி.டி., கேமரா காட்சிகளை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

அதில், லேப் டாப் பேக் திருடியது, சீர்காழி, பழைய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த சமுத்திரகனி மகன் வினோத், 35; என்பது தெரியவந்தது. இதையடுத்து, வினோத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான 2 லேப் டாப், ஐபேட், மொபைல் போன் மற்றும் ஸ்கூட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.புதுச்சேரி ரயில் நிலையத்தில், லேப் டாப் மற்றும் ஐபேட் திருடிய வாலிபரை 48 மணி நேரத்தில் பிடித்த ஒதியஞ்சாலை போலீசாரை, சீனியர் எஸ்.பி., கலைவாணன் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

Advertisement