மக்கள் விரும்பும் சுற்றுலா தலம்; முதலிடம் பிடித்தது தாஜ் மஹால்

புதுடில்லி : தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில், சுற்றுலா பயணியர் அதிகமாக வரும் இடமாக, தாஜ் மஹால் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மத்திய கலாசார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது:


கடந்த 2019 முதல் 2024 வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக உ.பி.,யின் ஆக்ராவில் உள்ள தாஜ் மஹால், அதிக சுற்றுலா பயணியர் வருகையுடன், நுழைவு சீட்டு விற்பனையிலும் முதலிடத்தில் உள்ளது.


கடந்த 2019ல் இரண்டாவது இடத்தை ஆக்ரா கோட்டையும், மூன்றாவது இடத்தை டில்லியில் உள்ள குதுப்மினாரும் பிடித்துள்ளன. 2021ல் தமிழகத்தின் மாமல்லபுரம் இரண்டாவது இடத்தையும், கோனார்க்கின் சூரியனார் கோவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. டில்லி செங்கோட்டையும் அதிக மக்கள் விரும்பும் இடமாக உள்ளது.


மஹாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை பற்றிய தகவல்கள் எதையும் இணையதளத்தில் இருந்து நீக்கவில்லை; அவுரங்கசீப் கல்லறையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.


சுற்றிலும் 12 அடி உயர உலோகத் தகடு, சுருள் முள்வேலி ஆகியவை அமைத்து, தனியார் பாதுகாப்பு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொல்லியல் துறை அதிகாரிகளும், குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement