தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி நடக்கிறது அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்

சென்னை:''தமிழகத்தில் ஆன்மிக ஆட்சியாக, தி.மு.க., ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - கார்த்திகேயன்:
வேலுார் வேலப்பாடி பகுதியில் உள்ள, தர்மராஜர் மற்றும் திரவுபதி அம்மன் கோவிலுக்கு, கும்பாபிேஷகம் நடத்த அனுமதி, நிதியுதவி வழங்க வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு:
அக்கோவிலில், 2.58 கோடி ரூபாயில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. செப்டம்பர் மாதத்திற்குள் பணி முடிக்கப்பட்டு கும்பாபிேஷகம் நடத்தப்படும்.

கார்த்திகேயன்: வேலப்பாடி - ஆரணி சாலையில் உள்ள நுாறாண்டுகள் பழமையான, வரசக்தி விநாயகர் கோவிலில் திருப்பணி நடக்கிறது. அதற்கும் நிதி ஒதுக்க வேண்டும். கும்பாபிேஷகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா?

அமைச்சர் சேகர்பாபு: வரசக்தி விநாயகர் கோவிலில், 33 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடக்கின்றன. அங்கும் செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, கும்பாபிேஷகம் நடத்தப்படும். நேற்று 22 கோவில்களில், திருமுறைப்பாடி தமிழில் கும்பாபிேஷகம் நடந்தது.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், தெய்வ கோஷங்களோடு, திருமுறை, திருப்புகழோடு, கும்பாபிேஷகம் நடக்கிற ஒரு ஆன்மிக ஆட்சியாக, தி.மு.க., ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து கோவில்களிலும் தமிழ் மந்திரம் ஓதப்படுகிறது.

கார்த்திகேயன்: வேலுார் மண்டல இணை ஆணையர் அலுவலகம், ஒரு ஆண்டுக்கு மேலாக கட்டப்பட்டு வருகிறது. விரைவாக பணிகளை முடிக்க வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு: பணிகள் முடிக்கப்பட்டு, செப்டம்பர் மாதத்திற்குள் அலுவலகம் திறக்கப்படும். தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட பிறகு, எட்டு இணை ஆணையர் அலுவலகம் கட்ட பணிகள் துவக்கப்பட்டன.

நாகப்பட்டினம், சேலம் இணை ஆணையர் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மீதி அலுவலகங்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும்.

இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement