'மாணவர்களின் தலை தப்பிக்கவே மரத்தடியில் வகுப்பறை நடத்துகிறோம்' அமைச்சர் மகேஷ் விளக்கம்
சென்னை:''பள்ளி கட்டடங்கள் இடிந்து தலையில் விழக்கூடாது என்பதற்காக தான், மரத்தடியில் மாணவர்கள் உட்கார வைக்கப்படுகின்றனர்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
சட்டசபையில் நடந்த கேள்விநேர விவாதம்:
அ.தி.மு.க., -- நத்தம் விஸ்வநாதன்: என் தொகுதியில் பல கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் மரத்தடியில் நடக்கின்றன. மழை பெய்தால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இடிந்த நிலையிலும், இடப் பற்றாக்குறையிலும் பல பள்ளிகள் இயங்குகின்றன.
தமிழகம் முழுதும் பள்ளி கட்டட பிரச்னை உள்ளது. எல்லா தொகுதியிலும் இந்த பிரச்னையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, பள்ளி கட்டட பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
அமைச்சர் மகேஷ்: இந்த அரசு அமைந்த பின், 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 8,000 வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டப்பட்டு உள்ளன; மேலும், 4,412 வகுப்பறைகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடக்கின்றன.
காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களையும், படிப்படியாக புதிதாக கட்டி வருகிறோம். வரும் 2027ம் ஆண்டிற்குள் 18,000 வகுப்பறைகள் கட்டுவதற்கான இலக்கை நோக்கி செல்கிறோம்.
நடப்பாண்டு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. பள்ளி உள்கட்டமைப்பை பொறுத்தவரை, இன்னும் அதிகம் மேம்படுத்த வேண்டும்.
மரத்தடியில் உட்கார்ந்து இருக்கின்றனர் என்றால், அங்குள்ள கட்டடங்கள் இடிந்து, பிள்ளைகள் தலையில் விழக்கூடாது என்பதற்காகத்தான்.
இருப்பினும் முன்னுரிமை வழங்கி, எங்கெல்லாம் மரத்தடியில் மாணவர்கள் உட்கார்ந்து இருக்கின்றனரோ, அங்கு வகுப்பறை கட்டடம் கட்டப்படும். வரும் காலத்தில், மரத்தடியில் வகுப்பறை இல்லாத அளவுக்கு எங்கள் பணி இருக்கும்.
அ.தி.மு.க., - தேன்மொழி: நிலக்கோட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லை. தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 15,000 முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த, ஏழ்மையான மாணவியரால் முடிவதில்லை.
இடைநிற்றல், குழந்தை திருமணம், வளரிளம் பெண்கள் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது.
மேல்நிலைப் பள்ளியில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, நிலக்கோட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்ட வேண்டும்.
அமைச்சர் மகேஷ்: இருபாலர் பள்ளியை பிரித்து, பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக அமைத்து தர வேண்டும் என, இரண்டு நாட்களுக்கு முன் எம்.எல்.ஏ., கூறினார்.
நான்கு, ஐந்து எம்.எல்.ஏ.,க்களும் இதுபோன்ற கோரிக்கையை வைத்துள்ளனர். சாதகங்களை ஆய்வு செய்து, நல்ல தீர்வை எடுப்போம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.