சமூக வலைதளத்தை குழந்தைகள் பயன்படுத்த தடை கேட்ட மனு தள்ளுபடி

4

புதுடில்லி : சமூக வலைதளங்கள் பயன்பாட்டை, 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயன்படுத்த தடை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்து, இது குறித்து மத்திய அரசை நாடும்படி அறிவுறுத்தியது.

மனச்சோர்வு



செப் அறக்கட்டளை என்ற சமூக நல நிறுவனம், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

நம் நாட்டில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை கட்டுப்பாடின்றி அணுக முடிவதால், அவை குழந்தைகளிடம் முன்னெப்போதும் இல்லாத மனநல நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளிடையே மனச்சோர்வு, பதற்றம் அதிகரிப்பதற்கும், அதிகப்படியான சமூக வலைதள பயன்பாட்டிற்கும் நேரடி தொடர்பு இருப்பதை ஆதாரங்கள் உறுதி செய்துள்ளன.

சமூக வலைதளங்களின் தொழில்நுட்பம் குழந்தைகளை அதிலேயே பல மணி நேரம் செலவிடும்படி அடிமையாக்குகிறது.

கொள்கை முடிவு



இதனால் அவர்களின் கல்வி கற்கும் திறன், உளவியல் நலனும் சீர்குலைகின்றன. இதுமட்டுமின்றி, சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களால் சிறுவர் - சிறுமியர் துன்புறுத்தலுக்கும் ஆளாகின்றனர்.

எனவே, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், 'இது ஒரு கொள்கை முடிவு சார்ந்த விஷயம்.

'இதை பரிசீலிக்க விரும்பவில்லை. இது தொடர்பாக சட்டம் இயற்றச் சொல்லி மத்திய அரசுக்கு கோரிக்கை வையுங்கள்' என கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement