குழந்தைகள் மீது பாலியல் குற்றங்கள் விசாரிக்க 14 சிறப்பு நீதிமன்றங்கள் சட்ட அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

சென்னை'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்,'' என, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில், ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் தலா ஒரு சார்பு நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தலா ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும்.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்ட வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக, சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், நாமக்கல், திருவாரூர், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய, 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள், மூன்று கட்டங்களாக அமைக்கப்படும்.

திருச்சியில் மாவட்ட நீதிபதி நிலையில், ஒரு கூடுதல் குடும்பநல நீதிமன்றம் அமைக்கப்படும். நீதிமன்ற தீர்ப்புகள், சட்டம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் இதர தேடல்களை எளிமையாக்க, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் மென்பொருள் வாங்கப்படும்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கூடுதல் வசதிகளுடன், மாவட்ட சிறைச்சாலை வளாகம் கட்டப்படும். 150 ஆண்டுகள் பழமையான மத்திய சிறை வளாகங்கள், பிற மாவட்டச் சிறைகள், கிளை சிறைகள், 20 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்

சிறைகளில் அசாதாரண சூழ்நிலைகளின்போது, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, பழைய லத்திகள், கேடயங்களுக்குப் பதிலாக, 90 புதிய, 'பாலி கார்பனேட்' லத்திகள், கேடயங்கள், கலவர தடுப்பு கவச உடைகள், 12 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Advertisement