ஷைலி சிங் நம்பிக்கை

புதுடில்லி: ''சர்வதேச போட்டிகளில் நிறைய பதக்கம் வெல்வேன் என்று நம்புகிறேன்,'' என, இந்தியாவின் ஷைலி சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய நீளம் தாண்டுதல் வீராங்கனை ஷைலி சிங் 21. உ.பி.,யை சேர்ந்த இவர், சமீபத்தில் சென்னையில் நடந்த இந்திய ஓபன் தடகளத்தில், அதிகபட்சமாக 6.45 மீ., தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். தவிர இவர், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி இலக்கான 6.41 மீ., விட அதிகமாக தாண்டினார். உலக ஜூனியர் (20 வயது) சாம்பியன்ஷிப் (2021), ஆசிய சாம்பியன்ஷிப் (2023) போட்டிகளில் தலா ஒரு வெள்ளி வென்றுள்ள இவர், வரும் ஏப். 21ல் மீண்டும் சென்னையில் நடக்கவுள்ள இந்திய ஓபனில் பங்கேற்க காத்திருக்கிறார்.


இதுகுறித்து ஷைலி சிங் கூறியது: சென்னையில் நடந்த இந்திய ஓபனில் தங்கம் வென்றது மகிழ்ச்சி. நடப்பு ஆண்டு நான் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி இலக்கை கடந்தது சிறப்பு. இந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் நிறைய பதக்கம் வெல்ல விரும்புகிறேன். இதற்காக கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். போட்டியில் சிறப்பாக செயல்பட உதவிய எனது பயிற்சியாளர் குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தடகள வாழ்க்கையில் சாதிக்க நிறைய இலக்குகள் உள்ளன. இதனை ஒவ்வொன்றாக அடைய முயற்சிப்பேன்.
இவ்வாறு ஷைலி கூறினார்.

Advertisement