தங்கம் வென்றார் சுருச்சி: உலக துப்பாக்கி சுடுதலில்

லிமா: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை சுருச்சி தங்கம் வென்றார்.

பெருவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங் (582.24 புள்ளி), மனு பாகர் (578.25) முறையே 2, 4வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.

அடுத்து நடந்த பைனலில் அசத்திய சுருச்சி, 243.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஹரியானாவை சேர்ந்த சுருச்சி 18, உலக கோப்பை அரங்கில் தொடர்ச்சியாக 2வது தங்கத்தை கைப்பற்றினார். சமீபத்தில் அர்ஜென்டினாவில் நடந்த உலக கோப்பையில் தங்கம் வென்றிருந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகர், 242.3 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.


சவுரப் 'வெண்கலம்': ஆண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி (578.22 புள்ளி), வருண் தோமர் (576.21) முறையே 5, 8வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். பைனலில் அசத்திய சவுரப், 219.1 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். வருண் (198.1 புள்ளி) 4வது இடத்தை கைப்பற்றினார்.

இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Advertisement