கொண்டாட்டத்தால் பறிபோன தங்கம்: நிதின் குப்தா ஏமாற்றம்

தம்மம்: ஆசிய சாம்பியன்ஷிப் (18 வயது) நடை போட்டியில் இந்தியாவின் நிதின் குப்தா வெள்ளி வென்றார்.

சவுதி அரேபியாவில், 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 6வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 5000 மீ., நடை போட்டி பைனலில் பங்கேற்றார். கடந்த மாதம் பாட்னாவில் நடந்த தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப்பில் நிதின் குப்தா 17, தேசிய சாதனை (19 நிமிடம், 24.48 வினாடி) படைத்து இருந்தார்.

இம்முறை துவக்கத்தில் சீராக ஓடிய இவர், கடைசி நேரத்தில் மற்ற இருவரை முந்தினார். கடைசி 10 விநாடி நேரத்துக்கு முன், எப்படியும் வெற்றி உறுதி என நினைத்து, இரு கைகளை உயர்த்தி கொண்டாடிக் கொண்டே ஓடினார். இதற்குள், சீனாவின் ஜூ நிங்காவோ (20 நிமிடம், 21.50 வினாடி), நிதின் குப்தாவை முந்தி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
கடைசி நேரத்தில் ஏமாற்றிய நிதின் குப்தா, 20 நிமிடம், 21.51 வினாடியில் கடந்து, 2வது இடம் பிடிக்க, வெள்ளிப்பதக்கம் தான் கிடைத்தது. சீனதைபேயின் ஷெங் கின் லோ (21 நிமிடம், 37.88 வினாடி) வெண்கலம் வென்றார்.


தன்னு 'வெள்ளி': பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில் இலக்கை 57.63 வினாடியில் கடந்த இந்தியாவின் தன்னு, 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை எட்வினா ஜேசன் (58.46 வினாடி) 5வது இடம் பிடித்தார்.

Advertisement