காங்., அரசை கவிழ்க்க மத்திய அரசு... சதி? சித்து, சிவகுமாருக்கு கார்கே எச்சரிக்கை

கலபுரகி: ''கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசை கவிழ்க்க, மத்திய அரசு சதி செய்து வருகிறது. இதிலிருந்து தப்பிக்க முதல்வரும், துணை முதல்வரும் தங்களுக்கு இடையே உள்ள பிரச்னைகளை உதறிவிட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும்,'' என, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை விடுத்தார்.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. உத்தரவாத திட்டங்கள் மூலம் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், தற்போது உத்தரவாத திட்டங்களை செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

சிவகுமார் அடம்



இதனால், பால், பஸ், மெட்ரோ, மின்சாரம், குடிநீர், மதுபானங்கள் விலை என அனைத்தையும் உயர்த்தி வருகிறது. மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதற்கிடையில், மாநிலத்தில் முதல்வர் நாற்காலிக்கான போட்டியும் தீவிரமாக நடந்து வருகிறது. துணை முதல்வர் சிவகுமார் முதல்வர் ஆகியே தீருவேன் எனவும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து போக மாட்டேன் எனவும் அடம் பிடித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று கலபுரகியில் அரசு சார்பில், கல்யாண கர்நாடகாவில் வசிப்பவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இந்த விழாவில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், கிராம பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பிரியங் கார்கே உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மிரட்டல் முயற்சி



விழாவில், மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

நாட்டின் வளர்சிக்காக இந்திரா, ராஜிவ் ஆகியோர், தங்கள் உயிரை தியாகம் செய்தனர். ஆனால், பா.ஜ., தலைவர்கள் என்ன செய்தனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலை அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு மிரட்ட பார்க்கிறது. ஆனால், அவர்கள் அதற்கெல்லாம் பயப்பட மாட்டார்கள்.

மத்திய அரசு, காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை வைத்து காங்., தலைவர்களின் வீடுகளில் சோதனையை மேற்கொள்வதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறது.

கையில் அதிகராத்தை வைத்து கொண்டு, அந்த அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பதற்கான சதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோன்ற ஒரு சதி திட்டத்தை, மத்திய அரசு தற்போது கர்நாடகாவிலும் செயல்படுத்த உள்ளது. எனவே, நாம் உஷாராக இருக்க வேண்டும்.

முதல்வர், துணை முதல்வர், தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை மறந்துவிட்டு, ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.

இல்லையெனில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இணைந்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவர். இதனால், மாநிலத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவர். காங்கிரசுக்கு ஓட்டு அளித்து தேர்வு செய்த மக்களை, நாம் தான் பாதுகாக்க வேண்டும்.

தேசத்தில் உள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் நமக்கு சகோதர, சகோதரிகளே. மக்கள் நலனுக்காக காங்கிரஸ் தொடர்ந்து போராட்டம் நடத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமருக்கு பதிலடி



சமீபத்தில், ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டு, முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி தரும் வகையில், நேற்றைய விழாவில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:

பிரதமர் மோடி, வக்ப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை கட்டாய உறுப்பினர்களாக சேர்ப்பது வகுப்புவாத வெறுப்பு அரசியலை காட்டும் விதமாக உள்ளது.

இது, அவரது நாற்காலிக்கு அவமரியாதையை ஏற்படுத்தும். கர்நாடகாவில் தலித்களுக்கான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவது என்பது பொய்யான குற்றச்சாட்டு ஆகும்.

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதாக கூறினார். ஆனால், அவர் 20 லட்சம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு வழங்கவில்லை.

கர்நாடகாவில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பின்மையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை மிக குறைவாக 2.5 சதவீதம் தான் உள்ளது. இது, மாநில அரசின் செயல் திறனை காட்டுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கலபுரகியில் அரசு சார்பில், கல்யாண கர்நாடகாவில் வசிப்பவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் துவக்க விழாவில் கலந்து கொண்டு கைகோர்த்த காங்., தலைவர்கள்.

Advertisement