தென்னையை தாக்கும் கருந்தலை புழுக்கள்; விவசாயிகளிடம் விழிப்புணர்வு

திருப்பூர்; திருப்பூர் வட்டாரத்தில், 3,700 ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில மாதங்களாக, தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகளவில் தென்படுகிறது.
குறிப்பாக, செட்டிபாளையம் கிராமத்தில், கருந்தலை புழு தாக்குதல் மிக அதிகளவில் தென்படுகிறது. தோட்டக்கலை துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, பூச்சி தாக்குதல் அறிகுறி மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
தோட்டக்கலை துறை திருப்பூர் வட்டார உதவி இயக்குனர் புனிதவேணி கூறுகையில், ''கோடை காலங்களில் கருந்தலை புழு தாக்குதல் மிக அதிகளவில் இருக்கும். கீழ் அடுக்கில் உள்ள இலைகள் காய்ந்து, பழுப்பு நிறமாகவும், நடுப்பகுதியில் உள்ள ஓலைகள் பச்சையாகவும், காய்ந்தும் காணப்படும்.
இலையின் அடிப்பகுதியில் புழுக்களின் எச்சங்கள், புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்கள் நுால் போன்று காணப்படும்,'' என்றார்.
முகாமில், கோவை தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியர், தென்னை வயல்களில் பிரகானிட் ஒட்டுண்ணி விடும் முறை குறித்து, செயல் விளக்கம் அளித்தனர். தென்னை பயிருக்கு பரிந்துரைக்கப்பட்ட உரமான ஒரு மரத்துக்கு, தழைச்சத்து, 1.3 கிலோ; மணிச்சத்து, 2 கிலோ; சாம்பல் சத்து, 3.5 கிலோ; மக்னீசியம் சல்பேட், 1.0 கிலோ மற்றும் கால்சியம் சல்பேட், 200 கிராம் ஆகியவற்றை இட வேண்டும் எனவும் பரிந்துரைத்தனர்.
பயிர் நோயியல் துறை விஞ்ஞானி கலையரசன், தோட்டக்கலை அலுவலர் லோகநாயகி, உதவி தோட்டக்கலை அலுவலர் சிவசங்கரி, சுபரஞ்சனி ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும்
-
கார்கே தலைமையில் காங்கிரஸ் மாநாடு: அதிருப்தி தலைவர்களும் பங்கேற்பு
-
மேகமலையில் சூழல் சுற்றுலா திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல் சுற்றுலாவின் சொர்க்க பூமியாக திகழும்
-
கல்லுாரி மாணவி மாயம்
-
'எக்ஸ்ரே' எடுத்த நோயாளிகள் பரிந்துரை பெற முடியாமல் தவிப்பு
-
பெரியகுளத்தில் நாளை பங்குனி உத்திரத் தேரோட்டம்
-
விதை நெல் விற்பனைக்கு தயார்