அ.தி.மு.க.,வுக்கு வி.சி.க., திருமாவளவன் பாராட்டு

33

சென்னை: ''தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க., உறுப்பினர்கள் 4 பேர் , வக்ப் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து ஓட்டளித்து இருப்பது பாராட்டுதலுக்குரியது'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.


சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களின் மீது புதிய வரி விதித்து இருக்கிறார். இந்த வரி விதிப்பை இதுவரையில் பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.


எதிர்க்கட்சிகள் அனைவரும் இன்றைக்கு அதை கண்டித்து லோக்சபாவில் கண்டன குரல்களை எழுப்பினோம். அவை நடவடிக்கையை தேதி குறிப்பிடாமல் லோக்சபா சபாநாயகர் ஒத்தி வைத்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் பார்லிமென்ட் வரலாற்றில் ஒரு களங்கம் என்று சொல்லக்கூடிய வகையில், வக்ப் திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறார்கள்.



பார்லிமென்ட் இரு அவைகளிலும், நள்ளிரவுக்கு மேல், இந்த விவாதத்தை நீட்டித்து தமது பெரும்பான்மையை வைத்து கொண்டு, ஒரு அநீதியை அரங்கேற்றி இருக்கிறார்கள். ஒவ்வொரு மதத்திற்கான சொத்துக்களை நிர்வகிப்பதற்கு அந்த மதங்களை சார்ந்த உறுப்பினர்களை கொண்ட குழு தான் செயல்பட்டு வருகிறது.


வக்ப் திருத்த சட்ட திருத்த மசோதாவிற்கு 288 வாக்குகள் ஆதரவாகவும், 232 வாக்குகள் எதிராகவும் லோக்சபாவில் பதிவு செய்யப்பட்டன. அந்த நள்ளிரவிலும் எதிர்க்கட்சியை சேர்ந்த 232 உறுப்பினர்கள் காத்திருந்து எதிர்த்து வாக்குப்பதிவு செய்து இருப்பது வரலாற்றில் மிக முக்கியமான பதிவு ஆகும். அதேபோல் ராஜ்யசபாவிலும் 95 பேர் எதிர்த்து ஓட்டளித்து இருக்கிறார்கள்.


அதில் தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க., உறுப்பினர்கள் 4 பேர் , வக்ப் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து ஓட்டளித்து இருப்பது பாராட்டுதலுக்குரியது. அடுத்து அவர்கள் என்ன செய்ய போகிறார்கள். அடுத்த கூட்டத்தொடரில் எந்த சட்டத்தை கொண்டு வரப்போகிறார்கள் என்ற அச்சம் தான் எழுகிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement