துருக்கி நாட்டில் தவித்த பயணியர் 2 நாட்களுக்கு பின் மும்பை திரும்பினர்

மும்பை: தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மருத்துவ அவசரம் காரணமாக விர்ஜின் அட்லான்டிக் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் துருக்கியில் தரையிறக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாக அங்கு தவித்து வந்த 250 பயணியர் நேற்று முன்தினம் இரவு மும்பை திரும்பினர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து, நம் நாட்டின் மும்பைக்கு விர்ஜின் அட்லான்டிக் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கடந்த 3ம் தேதி அதிகாலை புறப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதும் அந்த சமயத்தில் கண்டறியப்பட்டது.
இத்தகைய அசாதாரண சூழலில், ஐரோப்பிய நாடான துருக்கியின் தியார்பாகிர் என்ற சிறிய விமான நிலையத்தில் அன்று காலை அந்த விமானம் தரையிறங்கியது. விமானத்தில் 250க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர்.
அவர்களுக்கு விமான நிலையம் சார்பில் எந்த வசதியும் ஏற்பாடு செய்யப்படவில்லை. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் என்பதால், விமானத்தில் இருந்து வெளியேற முதலில் பயணியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
விர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனமும், 24 மணி நேரம் வரை எந்த வசதியையும் ஏற்பாடு செய்யவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த துருக்கியில் உள்ள இந்திய துாதரகம் விமான நிலைய கட்டுப்பாட்டாளரிடம் பேசி பயணியரை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க உதவியது.
அங்கு ஒரே ஒரு கழிப்பறையை அனைவரும் பகிர வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், பல மணிநேரம் இரும்பு நாற்காலியில் அமர்ந்திருந்ததாகவும் பயணியர் தெரிவித்தனர். உணவு, குடிநீருக்கே தவிக்கும் நிலை ஏற்பட்டதாகவும் சிலர் கூறினர்.
அதன்பின் விர்ஜின் அட்லான்டிக் நிறுவனம் மாற்று விமானத்தை வரவழைத்து பயணியர் அனைவரையும் பத்திரமாக மும்பைக்கு அனுப்பியது. அவர்கள் நேற்று முன்தினம் இரவு மும்பை வந்து சேர்ந்தனர்.



மேலும்
-
ஐ.எஸ்.எல்., கால்பந்து: பைனலில் பெங்களூரு
-
இந்தியா 76வது இடம்: கூடைப்பந்து தரவரிசையில்
-
மும்பை அணியில் பும்ரா
-
தங்கம் வென்றார் ஹிதேஷ்: உலக குத்துச்சண்டையில் வரலாறு
-
ஜப்பான் 'பார்முலா-1': வெர்ஸ்டாப்பன் 'சாம்பியன்'
-
இன்னும் நகராமல் அப்படியே இருக்கும் தேர்தல் வாக்குறுதி! முதல்வரிடம் கேள்வி எழுப்ப காத்திருக்கும் கோவை மக்கள்