திரிணமுல் - பா.ஜ., மோதல் மேற்கு வங்கத்தில் பதற்றம்

6

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ராம நவமி கொண்டாட்டம் தொடர்பாக ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., இடையே போட்டி எழுந்துள்ள நிலையில், மாநிலம் முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, கடந்தாண்டு நடந்த ராம நவமி கொண்டாட்டத்தின் போது, இரு சமூகங்களுக்கு இடையே மோதல் வெடித்தது.

ராம நவமி பேரணியில் நடந்த கல்வீச்சு தாக்குதலே இதற்கு காரணம் என கூறப்பட்டது. வாகனங்கள் எரிக்கப்பட்டன; வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த விவகாரம், ஆளும் திரிணமுல் காங்., மற்றும் பா.ஜ., இடையே மோதலை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராமர் பிறந்த நாளான ராம நவமி நாடு முழுதும் இன்று கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

பா.ஜ., சார்பில் ஊர்வலங்கள், சொற்பொழிவுகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரிணமுல் காங்கிரசும் ராம நவமி கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

ராம நவமி கொண்டாட்டத்துக்காக மேற்கு வங்க சாலைகளில் ஒரு கோடிக்கும் அதிகமான ஹிந்துக்கள் கூடுவர் என பா.ஜ., தெரிவித்துள்ள நிலையில், இந்த நிகழ்வை அக்கட்சி அரசியலாக்குவதாக திரிணமுல் காங்., குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த சூழலில், ராம நவமி கொண்டாட்டத்தை ஒட்டி கொல்கட்டா உட்பட மாநிலம் முழுதும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொல்கட்டாவில் மட்டும் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வை அனைவரும் ஒற்றுமையாக கொண்டாட வேண்டும் என போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ஹவுரா உட்பட முக்கிய நகரங்களில் போலீசார் நேற்று வாகன அணிவகுப்பு நடத்தினர்.

Advertisement