தந்தை வழியில் போகாத ஸ்டாலின்; நிர்மலா சீதாராமன் விமர்சனம்

11


செங்கல்பட்டு: வரும் 2034ம் ஆண்டு நடக்கும் லோக்சபா பொதுத்தேர்தலின் போது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; 2029ம் ஆண்டு நடக்கும் பார்லிமென்ட் தேர்தலுக்குப் பிறகு தான், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பணிகளை ஜனாதிபதி தொடங்குவார். முழுவிபரம் தெரியாமல் பேசுபவர்களுக்கு நாம் இதனை சொல்ல வேண்டும்.

தேர்தல் ஆணையத்திற்கும் இந்த சட்டத்திருத்தம் செய்வதனால் அதிகாரம் கிடைக்கும். இது தொடர்பான பரிந்துரைகளை கொடுத்ததும் ஒரு உயர்மட்டக் குழு தான். இந்த பரிந்துரையின் மூலமாக ஒரு நிரந்தர கட்டமைப்பு உருவாகிறது. 2029ம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைகளுக்கான பணிகளை தொடங்கினால், 2034ம் ஆண்டு நடக்கும் பொதுத்தேர்தலின் போது செயல்படுத்தப்படும்.

2034ம் ஆண்டுக்கு முன்பு இந்த நடைமுறை செயல்படுத்த வாய்ப்பில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்களிடம் இந்த உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும்.

1951ம் ஆண்டு முதல் 1960ம் ஆண்டு காலகட்டங்களில் சட்டசபைக்கும், பார்லிமென்ட்டுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தது. 1957ம் ஆண்டில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அப்போது, மாநில சட்டசபைகளாக இருந்த, பீஹார், பாம்பே, மெட்ராஸ், மைசூர், பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சட்டசபைகளை கலைத்து விட்டு, பார்லிமென்ட் தேர்தலுடன் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த முறை ஏன் மாற்றப்பட்டது என்பது அடுத்த கேள்வி? 1961 முதல் 1970 வரையில் 5 மாநிலங்களில் 10 ஆண்டுகளில் 3 முறை தேர்தல் நடத்தப்பட்டது. பீஹார், கேரளா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டத்திருத்தம் 356ஐ பயன்படுத்தி ஆட்சி கலைப்பது உள்ளிட்ட பல காரணங்களால் 10 ஆண்டுகளில் 3 முறை தேர்தல் நடந்தது.

1959ல் உலகிலேயே ஒரு கம்யூனிஸ்ட் அரசு ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்டது கேரளாவில் தான். இந்த ஆட்சியை ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் தூக்கி போட்டது.

1971 முதல் 1980 வரையில் 14க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 3முறை தேர்தல் நடைபெற்றது. ஒடிசாவில் 10 ஆண்டுகளில் 4 முறை தேர்தல் நடந்துள்ளது. இதனால், மக்கள் நலப்பணிகள் பாதிக்கப்பட்டன. இதுபோன்ற ஸ்திரத்தன்மை இல்லாத அரசுகளால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக சட்ட ஆணையம் கருதியது.

அடுத்தடுத்து தேர்தல் நடத்துவதால் செலவு அதிகரிக்கிறது. பார்லிமென்ட் நிலைக்குழுவானது, ஒரே நாடு ஒரே தேர்தலை பரிந்துரைக்கிறது. 2019ல் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற 19 கட்சிகளில் 16 கட்சிகள் ஒப்புக் கொண்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தன.

அதேபோல, ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவும் நாடு முழுவதும் 47 கட்சிகளிடம் கருத்து கேட்டன. அதில், 32 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அ.தி.மு.க., பா.மக., த.மா.கா., புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆம்ஆத்மி, தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

நிர்வாக சிக்கல்களை தவிர்க்கவும், மக்கள் நலத்திட்டங்களை தடையின்றி செய்யவும் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அவசியமாகிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கு மட்டும் ரூ.1 லட்சம் கோடி செலவாகியுள்ளது. அதுவே, ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்தினால், ரூ.12 ஆயிரம் கோடி மிச்சமாகும். அதனை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். நாட்டின் ஜி.டி.பி., வளர்ச்சி1.5 சதவீதம் அதிகரிக்கும் என்கின்றனர். ரூ.4.5 லட்சம் கோடி நமது பொருளாதாரத்தில் இன்னும் அதிகரிக்கும்.



2015ல் பார்லிமென்ட் நிலைகுழுவின் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சன் நாச்சியப்பன் ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வர வலியுறுத்தினார். 2019ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், ஒரே நாடு ஒரே தேர்தல் சிறப்பான ஒன்று என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.


அதேபோல, மறைந்த தலைவர் கருணாநிதியும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தார். இதனை அவரது சுயசரிதையிலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இன்று முதல்வராக இருக்கும் ஸ்டாலின், தந்தை சொன்ன வழியில் போகாமல் எதிர்ப்பேன், என்று எதிர்க்கிறார். இப்போது, ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்ப்பவர்கள் அனைவரும் இதனை ஆதரிப்பவர்கள் தான். அரசியல் ஆதாயத்திற்காக, அதனை எதிர்ப்பேன் என்று எதிர்க்கின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement