நீட் பிரச்னையில் முதல்வர் நாடகம் மதுரையில் தமிழிசை சாடல்

அவனியாபுரம் : ''நீட் தேர்வு, தொகுதி வரையறை என அனைத்து பிரச்னைகளிலும் முதல்வர் ஸ்டாலின் நாடகமாடுகிறார்,'' என, மதுரையில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் தமிழிசை குற்றம்சாட்டினார்.

சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்ல விமானம் மூலம் மதுரை வந்த அவர் கூறியதாவது: தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நல்லுறவு காண்போம் என பிரதமர் மோடி பாலம் அமைத்துள்ளார். அதற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

பிரதமரால் தமிழர்களுக்கு நல்லது நடந்தால் கூட முதல்வர் ஸ்டாலின் நன்றி சொல்ல மாட்டார்.

தமிழக மக்கள் நலனுக்காக இந்தியாவிலேயே முதல் தர தொழில்நுட்பத்தால் ராமேஸ்வரம் கடலில் ரயில் பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முதல்வர் நேரடியாக வந்து நன்றி சொல்லி வரவேற்று இருக்க வேண்டும்.

துவக்கத்திலிருந்தே முதல்வர் ஸ்டாலின் எதிரி போக்கை கையிலெடுத்து வருகிறார். தி.மு.க., தன் நடவடிக்கைகளால் மக்களிடமிருந்து விலகி செல்கிறது. தமிழக மக்களுக்காக பிரதமர் மோடி கொடுக்கும் திட்டங்களை குறை மட்டும் கூறாமல் நல்லவற்றிற்கு பாராட்ட வேண்டும்.

கச்சத்தீவு பிரச்னையில் தமிழக மக்களுக்கு தி.மு.க., பதில் சொல்லியே வேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்தது தி.மு.க., தான். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என தி.மு.க., கூறியிருக்கிறது. மத்திய ஆட்சியில் இருந்த போது ஸ்டாலினுக்கு இது நினைவுக்கு வரவில்லையா என்றார்.

Advertisement