16 வயது சிறுமி மிரட்டி பலாத்காரம் பேட்மின்டன் பயிற்சியாளர் கைது

ஹுலிமாவு : பயிற்சிக்கு சென்ற 16 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த, பேட்மின்டன் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மொபைல் போனில், மேலும் எட்டு சிறுமியரின் ஆபாச புகைப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
பெங்களூரு ஹுலிமாவு பகுதியைச் சேர்ந்த, தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். தனியார் பள்ளியில் படிக்கும் இந்த சிறுமி, கோடை விடுமுறைக்காக தன் பாட்டி வீட்டிற்கு சென்றார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, சிறுமி தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படத்தை பாட்டியின் மொபைலில் இருந்து, இன்னொரு நம்பருக்கு அனுப்பி வைத்தார். இதை கவனித்த பாட்டி, சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளிடம் விசாரித்தனர்.
அதிர்ச்சி
பேட்மின்டன் பயிற்சியாளர் சுரேஷ் பாலாஜி, 30, என்பவருக்கு, ஆபாச புகைப்படத்தை அனுப்பியதாக சிறுமி ஒப்புக் கொண்டார். இதைக் கேட்டு மேலும் அதிர்ந்த பெற்றோர், 'உங்கள் இருவருக்கும் இடையில் என்ன நடக்கிறது?' என்று, மகளிடம் கேட்டுள்ளனர்.
“கடந்த ஆறு மாதங்களாக என்னை மிரட்டி, சுரேஷ் பாலாஜி பலாத்காரம் செய்கிறார். என்னை நிர்வாணமாக புகைப்படம், வீடியோ எடுத்து உள்ளார். தனக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், புகைப்படம், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார்,” என, பெற்றோரிடம் சிறுமி கூறி உள்ளார்.
8 நாட்கள் காவல்
இதையடுத்து ஹுலிமாவு போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் சுரேஷ் பாலாஜியை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கின்ற னர்.
சுரேஷ் பாலாஜியின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது, பாதிக்கப்பட்ட சிறுமி மட்டுமின்றி, மேலும் எட்டு சிறுமியரின் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியும், மேலும் எட்டு சிறுமியரும் பேட்மின்டன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சுரேஷ் பாலாஜி, நைசாக பேசி சிறுமியரை தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.
பின், தன் அறைக்கு அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதும் தெரிய வந்துள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
கைதான சுரேஷ் பாலாஜி தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆறு ஆண்டுகளாக பெங்களூரில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.