இரு விபத்துகளில் எட்டு பேர் உயிரிழப்பு

கலபுரகி சாலை ஓரம் நின்றிருந்த லாரி மீது, மினி பஸ் மோதியதில் ஐவர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். மற்றொரு விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

பாகல்கோட் நகரின் தெங்கினகாயி லே - அவுட்டில் வசிக்கும் 31 பேர் சேர்ந்து, கலபுரகியில் உள்ள காஜா பந்தேநவாஜ் தர்காவுக்கு மினி பஸ்சில் புறப்பட்டனர். நேற்று காலையில், கலபுரகி மாவட்டம், ஜேவர்கி தாலுகாவின் நெலோகி கிராஸ் அருகில் மினி பஸ் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் நின்றிருந்த லாரி மீது மோதியது.

இதில் மினி பஸ்சின் முன்பகுதி பயங்கரமாக நொறுங்கியது. அதில் பயணம் செய்த மாலனபி மெஹபூப் கத்தனகேரி, 52, வாஜித் மெஹபூப், 2, மெஹபூபி உஸ்மான் சாப், 53, பிரியங்கா, 13, மஹிபூப் உஸ்மான் சாப், 29, ஆகியோர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த நெலோகி போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

கலபுரகி எஸ்.பி., அட்டூர் சீனிவாசலு, சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

பெலகாவி மாவட்டம், காக்வாடை சேர்ந்த ஐந்து பேர், தாவணகெரேவில் இருந்து, சந்தேபென்னுாருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை, தாவணகெரேவின், அத்திகெரே அருகில் சென்றபோது, தனியார் பஸ் மோதியது. காரில் இருந்த பசவ ராஜப்பா, 38, ஸ்ரீதர், 32, விஜய்குமார், 35, ஆகியோர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்து மருத்துவமனையில், சிகிச்சை பெறுகின்றனர்.

அத்திகெரே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement