வக்ப் மசோதாவை ஆதரித்ததால் முஸ்லிம் ஓட்டுக்களை இழக்கிறாரா நிதிஷ்? உண்மை நிலவரம் இதோ!

9

பாட்னா: வக்ப் மசோதாவுக்கு ஜக்கிய ஜனதா தளம் ஆதரித்ததால், அந்தக் கட்சியின் 5 முக்கிய முஸ்லிம் தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். பீஹார் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்தக் கட்சி முஸ்லிம் ஓட்டுக்களை இழக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பார்லிமென்டில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு பார்லிமென்டில் நடந்த ஓட்டெடுப்பில், பீஹாரை ஆளும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி.,க்கள் ஆதரவு கொடுத்தனர்.

இதற்கு அதிருப்தி தெரிவித்து ஐக்கிய ஜனதா தளத்தின் முஸ்லிம் எம்.பி.,க்கள் உள்பட 5 முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து விலகினர்.

விரைவில் பீஹார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முஸ்லிம்களின் ஓட்டுக்கள் நிதிஷ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லையா? என்பது குறித்து புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, பா.ஜ.,வுடன் கூட்டணி மற்றும் பா.ஜ., அல்லாத கூட்டணியில் நிதிஷ்குமாருக்கு முஸ்லிம் ஓட்டுக்கள் எத்தனை சதவிகிதம் விழுந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2014 லோக்சபா தேர்தல் மற்றும் 2015ல் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை எதிர்த்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டது. 2014ல் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டதில், 23.5 சதவீத முஸ்லிம் ஓட்டுக்களை பெற்றுள்ளது. அதேபோல, 2015 சட்டசபை தேர்தலில் 80 சதவீத முஸ்லிம் ஓட்டுக்களை பெற்றுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து 2020 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது 5 சதவீத முஸ்லிம் ஓட்டுக்களையும், 2019 லோக் சபா தேர்தலில் 6 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றது. அதேபோல, 2024 லோக்சபா தேர்தலில் 12 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது. இது கடந்த 2014 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் குறைவாகும்.

2024 லோக்சபா தேர்தலின் போது பீஹாரில் 7.64 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி, 1.75 கோடி (17 சதவீதம்) பேர் முஸ்லிம் மக்கள். அதில், 1.29 கோடி பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள்.

அதேபோல, 2015 தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட 7 முஸ்லிம் வேட்பாளர்களில் 5 பேர் வெற்றி பெற்றனர். 2020ம் ஆண்டில் 11 பேர் போட்டியிட்ட நிலையில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளார் நிதிஷ்குமார்.

இதன்மூலம், வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்த நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் கட்சிக்கு, எதிர்வரும் சட்டசபை தேர்தலில் முஸ்லிம் ஓட்டுக்கள் எந்தவிதமான பாதகத்தையும் ஏற்படுத்தாது என்பதே நிதர்சனமான உண்மை என்று தெரிய வந்துள்ளது.

Advertisement