ராஜஸ்தான் அணி அசத்தல் * அரைசதம் விளாசினார் ஜெய்ஸ்வால்

முல்லன்புர்: ஜெய்ஸ்வால் அரைசதம் கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப்பின் முல்லன்புரில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ், பீல்டிங் தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்
ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஜோடி இம்முறை நல்ல துவக்கம் கொடுத்தது. யான்சென் வீசிய போட்டியின் 4வது ஓவரில் சாம்சன் ஒரு பவுண்டரி அடித்தார். ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து 2 சிக்சர் அடிக்க, 19 ரன் எடுக்கப்பட்டன. பின் பெர்குசன் பந்திலும் சிக்சர் விளாசினார் ஜெய்ஸ்வால். இத்தொடரில் முதன் முறையாக 'பவர் பிளே' ஓவர்களில் (6 ஓவர், 53/0 ரன்) விக்கெட் இழக்காமல் இருந்தது ராஜஸ்தான்.
ஜெய்ஸ்வால் அரைசதம்
ஸ்டாய்னிஸ், சஹால் பந்துகளை சாம்சன் பவுண்டரிக்கு விரட்ட, ராஜஸ்தான் அணி 10 ஓவரில் 85/0 ரன் குவித்தது. இந்நிலையில் பெர்குசன் பந்தில் அவுட்டானார் சாம்சன் (38). சஹால் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால், இத்தொடரில் முதல் அரைசதம் எட்டினார். ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 105/1 ரன்களை (12 ஓவர்) கடந்தது.
ஸ்டாய்னிஸ் வீசிய ஓவரில் சிக்சர், பவுண்டரி என ஜெய்ஸ்வால் மீண்டும் விளாச, 17 ரன் கிடைத்தன. இவர் 67 ரன் எடுத்த போது பெர்குசன் பந்தில் போல்டானார். வந்த வேகத்தில் பெர்குசன் ஓவரில் 2 பவுண்டரி அடித்த நிதிஷ் ராணா (12) நிலைக்கவில்லை.
பின் வரிசையில் ஹெட்மயர், ரியான் பராக் இணைந்தனர். அர்ஷ்தீப் பந்துகளில் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்த ரியான் பராக், யான்சென் ஓவரில் 2 சிக்சர் விளாசினார். ஹெட்மயர் 20 ரன்னில் திரும்பினார். ஸ்டாய்னிஸ் வீசிய கடைசி ஓவரில், தலா 1 சிக்சர், 1 பவுண்டரி அடித்தார் ஜுரல். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன் எடுத்தது. ஜுரல் (13), ரியான் பராக் (43) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆர்ச்சர் 'இரண்டு'
பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. ஆர்ச்சர் வீசிய முதல் பந்தில் போல்டானார் ஆர்யா (0). அடுத்து வந்த ஷ்ரேயஸ் (10), 2, 4வது பந்தில் பவுண்டரி அடித்து பதிலடி தந்தார். இவரை கடைசி பந்தில் போல்டாக்கினார் ஆர்ச்சர். ஸ்டாய்னிஸ் (1), சந்தீப் சர்மா வேகத்தில் அவரிடமே 'கேட்ச்' கொடுத்து திரும்பினார். பிரப்சிம்ரன் 16 பந்தில் 17 ரன் எடுத்து அவுட்டானார்.
மேக்ஸ்வெல் (30), அரைசதம் அடித்த வதேரா (62) போராடிய போதும் வெற்றிக்கு போதவில்லை. மற்ற வீரர்கள் கைவிட, பஞ்சாப் அணி 20 ஓவரில் 155/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

மீண்டும் கேப்டன்
ராஜஸ்தான் கேப்டன், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், கைவிரல் காயம் காரணமாக முதல் 3 போட்டியில் 'இம்பேக்ட்' வீரராக (பேட்டிங்) மட்டும் விளையாடினார். ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். நேற்று மீண்டும் கேப்டன் பொறுப்பேற்ற சாம்சன், விக்கெட் கீப்பிங் பணியிலும் ஈடுபட்டார்.

மந்தமான அரைசதம்

ஜெய்ஸ்வால் நேற்று 41 பந்தில் அரைசதம் அடித்தார். பிரிமியர் அரங்கில் இவரது மந்தமான அரைசதம் இதுவானது. முன்னதாக 2024ல் 31 பந்தில் அரைசதம் (மும்பை) அடித்து இருந்தார்.

Advertisement