ஸ்ரீபெரும்புதுார் - காஞ்சிபுரம் சாலை பணி விரைவில் முடியும் எம்.பி., பாலு கேள்விக்கு நெடுஞ்சாலை துறை பதில்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க.,- - எம்.பி.,யுமான பாலு தலைமையில் நடந்தது.
மத்திய அரசு பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் போன்றவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி துறை, கல்வி, வேளாண், சுகாதாரம் என, மத்திய அரசின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் விதிமுறைகளுக்குட்பட்டு நடைபெறுகின்றதா என, பல்வேறு துறைகள் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி, உரிய காலத்தில் முடிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காரீப் பருவம் மற்றும் சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீட்டு பதிவு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், சிறப்பு பருவத்தில் இழப்பீட்டு தொகை வழங்கிய விபரங்கள் குறித்தும் டி.ஆர்.பாலு கேட்டறிந்தார்.
பல்வேறு திட்டங்கள் பற்றி அவர் கேள்வி எழுப்பியதற்கு, அதிகாரிகள் பதில் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நிருபர்களிடம் பாலு கூறியதாவது:
ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் தாமதமாகி வருகிறது. நான் பல முறை கேட்டும், அடுத்த முறை விரைவில் பணிகள் முடிப்பதாக நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 84 கோடி ரூபாய் பாக்கி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம், ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை, தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, மேயர் மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.