ஏ.ஐ.,யில் 'ஜிப்லி' படங்களை உருவாக்குவோருக்கு எச்சரிக்கை

கோவை,: ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தி, 'ஜிப்லி' அனிமேஷன் படங்களை உருவாக்குவோரின் தனிப்பட்ட படங்கள் கசிய வாய்ப்பு உள்ளதாக போலீசார் எச்சரிக்கின்றனர்.
ஜப்பானிய கலாசாரத்தை உள்ளடக்கி, கையால் வரையப்படும் அனிமேஷன் படங்கள் தான் ஜிப்லி என அழைக்கப்படுகின்றன. ஜிப்லி அனிமேஷன் படங்கள் நுணுக்கமான வேலைப்பாடுகளை கொண்டு வரையப்படும்.
ஆனால், பட்டனை தட்டிய வேகத்தில் நம் படங்களை ஜிப்லி படங்களாக உருவாக்கி தருகிறது ஏ.ஐ., தொழில்நுட்பம். இந்த ஜிப்லி ஆர்ட் படங்கள் தான் தற்போது இணையத்தில் டிரெண்டாக உள்ளன. சாதாரண இணைய வாசிகள் முதல், இணைய பிரபலங்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் வரை பலர், இந்த ஜிப்லி ஆர்ட் பயன்படுத்தி தங்கள் படங்களை அனிமேஷன் படங்களாக உருவாக்கி வருகின்றனர். மேலும், இந்த ஜிப்லி ஆர்ட் இணையத்தில் டிரெண்டாக இருப்பதற்கு முக்கிய காரணம், ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் சாட் ஜி.பி.டி., செயலி வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டது தான். மேலும், சாட் ஜி.பி.டி., இந்த ஜிப்லிஆர்ட் உருவாக்குவதை இலவசமாக அளிக்கிறது.
இதனால், இளைஞர்கள் மட்டுமின்றி சிறுவர்கள், பெரியவர்கள் என பல தரப்பு மக்கள் தங்களின் போட்டோக்களை ஏ.ஐ., செயலியில் பதிவேற்றம் செய்து, தங்களின் அனிமேஷன் படத்தை உருவாக்கி ரசிக்கின்றனர். மேலும், அவற்றை இணையதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.
ஒரு பக்கம் இந்த ஜிப்லி ஆர்ட் படங்கள் இணைய வாசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும், மறுபக்கம் பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன. 'அப்லோடு' செய்யப்படும் படங்கள் ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் தவறுதலாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும், தனிப்பட்ட படங்கள் வெளியில் கசிய வாய்ப்புள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசார் மற்றும் சைபர் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மக்கள் தங்களின் போட்டோக்களை ஜிப்லி ஆர்ட் படங்களாக மாற்றச் சொல்லி, ஏ.ஐ., செயலிகளில் 'அப்லோடு' செய்கின்றனர். இந்த படங்களை, ஏ.ஐ., தன் திறன் மேம்பாட்டுக்காக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், நம் தோற்றத்தை வேறு இடங்களிலும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது என, சைபர் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பலரும் சாட் ஜி.பி.டி.,யில் படங்களை பதிவேற்றம் செய்து ஜிப்லி படங்கள் உருவாக்குகின்றனர். மேலும், பலர் பல்வேறு இணையதளங்கள், புதிய செயலிகளை பயன்படுத்தி படங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். நாளடைவில் ஜிப்லி ஆர்ட் படங்கள், வீடியோக்கள் உருவாக்க, பல்வேறு புதிய செயலிகள் அறிமுகமாகும். அவற்றை பயன்படுத்தி ஜிப்லி உருவாக்க முயற்சிக்கும் போது, தகவல்களை திருட வாய்ப்புள்ளது. தற்போது வரை பெரிய பாதகம் எதுவும் நடக்கவில்லை என்றாலும், வரும் காலத்தில் நம் தனிப்பட்ட தகவல்கள், படங்களை தவறுதலாக பயன்படுத்த வாய்ப்பு அதிகம். ஜிப்லி ஆர்ட் உருவாக்க விரும்புவோர், நம்பகமான ஏ.ஐ., தளங்களை மட்டும் பயன்படுத்துவது பாதுகாப்பானது.- தினேஷ்சைபர் செக்யூரிட்டி நிபுணர்.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் பல நன்மைகள் உள்ளன. அதேபோல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலர் மோசடிகளையும் அரங்கேற்றி வருகின்றனர். ஒருவரின் படத்தையும், தனிப்படை தகவல்களையும் பயன்படுத்தி மோசடி செய்வது அதிகரித்துள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து தான் செய்ய வேண்டிய நிலையுள்ளது. நம் புகைப்படங்கள், நாம் நம் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் பதிவேற்றம் செய்வது, பல வகையாக சிக்கல்களை ஏற்படுத்தும். போட்டோக்கள் 'மார்பிங்' செய்யப்படலாம்; தவறான வகையில் பயன்படுத்தலாம் அல்லது பண மோசடி செய்ய பயன்படுத்தலாம். சமூக வலைதளங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.- அருண்சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்
மேலும்
-
ரேஷன் பொருட்கள் வினியோகிப்பதில் முறைகேடு: விற்பனையாளர் 'சஸ்பெண்ட்'
-
வக்ப் சட்ட திருத்தம்: காங்., ஆர்ப்பாட்டம்
-
படப்பை மேம்பால பணிகளை இம்மாதத்திற்குள் முடிக்க திட்டம்
-
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியருக்கு ஊதிய குறைப்பை தடுக்க வலியுறுத்தல்
-
அரசு பஸ்கள் தடம் நீட்டிப்பு அமைச்சர் துவக்கிவைப்பு
-
காஞ்சியில் ராமநவமி உத்சவம் விமரிசை