ரேஷன் பொருட்கள் வினியோகிப்பதில் முறைகேடு: விற்பனையாளர் 'சஸ்பெண்ட்'
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி பகுதியில், முன் மாதிரி ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதன் விற்பனையாளராக அருள்மணி, எடை போடும் தற்காலிக ஊழியராக அன்பு ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
ஒவ்வொரு மாதமும் எடை குறைவாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த எடை குறைபாடு குறித்து, ரேஷன் கடை ஊழியரிடம் நுகர்வோர் கேட்டால், அவர் சரியாக பதில் அளிப்பதில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று, 50க்கும் மேற்பட்டோர் கடை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காஞ்சிபுரம் குடிமைப்பொருள் தாசில்தார் லட்சுமி, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின், கூட்டுறவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது.
அதை தொடர்ந்து, ரேஷன் கடை ஊழியர் அருள்மணி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். எடை போடும் அன்பு மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்த ரேஷன் கடைக்கு, கோட்ராம்பாளையம் ரேஷன் கடை ஊழியர் காய்த்ரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக, துணைப் பதிவாளர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.