ஊட்டியில் புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனை

1

ஊட்டி : ஊட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை முதல்வர் இன்று திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இன்று நடக்க உள்ள, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை திறப்பு விழா; அரசு கலை கல்லுாரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, மாநில முதல்வர் ஸ்டாலின், நேற்று மாலை, 5:40 மணிக்கு கோத்தகிரி வழியாக வந்தார்.

காமராஜர் சதுக்கத்தை அடைந்த அவருக்கு, மாவட்ட செயலாளர் ராஜூ, தலைமையில் மக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, காரில் இருந்து இறங்கிய ஸ்டாலின், 500 மீட்டர் துாரம் வரை சாலையில் நடந்து சென்று, மனுக்களை பெற்று கொண்டார்.

அதன்பின், நேற்று மாலை, 6:45 மணிக்கு ஊட்டிக்கு வந்தார். சேரிங்கிராசில் மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்க கூட்டம் கூடியது. அவர் காரில் இருந்து இறங்கி வருவார் என கட்சியினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர் வாகனத்தில் இருந்தபடி வணக்கம் தெரிவித்து சென்றார். இதனால், திரளான கட்சி தொண்டர்கள், பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து தமிழகம் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

புதிய மருத்துவமனை திறப்பு



இன்று, (6ம் தேதி) காலை, 10:00 மணிக்கு, 494.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

பின், 1,703 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார்.

தொடர்ந்து, ஊட்டி அரசு கலை கல்லுாரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று, 15,000 பயனாளிகளுக்கு, 102.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, 56 புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நண்பகல், 12:00 மணிக்கு கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்ல உள்ளார்.

Advertisement