புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீராமர் - சீதா திருக்கல்யாண விழா

புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீ ராம நவமி விழாவை முன்னிட்டு, ஸ்ரீராமர் - சீதா திருக்கல்யாண நிகழ்வை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீராமர் -- சீதாதேவி திருக்கல்யாணம் நேற்று நடந்தது.
லட்சுமணர், பக்த ஹனுமனுடன், ஸ்ரீராமர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வேத மந்திரங்கள் மற்றும் நாதஸ்வரம் முழங்க, சங்கல்பம், ரக் ஷாபந்தனம், யக்ஞோபவீதம், காசி யாத்திரை, கன்னியாதானம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, தெய்வீக தம்பதியினருக்கு பூர்ணாஹுதி மற்றும் மங்கள ஆரத்தியுடன் லஜ ஹோமம் முடிந்தது.
திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கடந்த 2002 ஏப்., 21ல் புனித ஸ்ரீராம நவமி நிகழ்வின் போது நிகழ்த்தப்பட்ட மூல உரையிலிருந்து, பகவான் சத்ய சாய் பாபாவின் தெய்வீக சொற்பொழிவு ஒளிபரப்பப்பட்டது.
திருக்கல்யாண நிகழ்ச்சியின் போது நடந்த தெலுங்கு மற்றும் ஆங்கில வர்ணனைகள், ராம ராஜ்ஜியத்தை மீண்டும் கண் முன் கொண்டு வந்தது. தொடர்ந்து ராம பஜனைகள், பகவானுக்கு மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவடைந்தது.