ஆயிரம் சந்தேகங்கள் : சந்தை சரிகிறதே, எஸ்.ஐ.பி.,யை நிறுத்தி விடலாமா?

பொதுத் துறை வங்கியில் சேமிப்புக் கணக்கில் வரி பிடித்தம் இல்லாமல் எவ்வளவு ரூபாய் வரை சேமிக்கலாம்? அதற்கு என்ன வட்டி கிடைக்கும்? அதேபோல் வரி பிடித்தம் இல்லாமல், வைப்பு நிதியில் எவ்வளவு போடலாம்?




எஸ்.எம். கார்த்திகேயன்,

கோவை
.

பொதுத் துறை வங்கிகளில் சேமிப்பு கணக்குக்கு 2.70 முதல் 3 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். இவ்வளவு தான் பணம் வைத்திருக்க வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பொதுவாக, ஒவ்வொரு காலாண்டு முடிவிலும், வட்டி வரவு வைக்கப்படும்.

ஒருசில வங்கிகளில் இதுவே மாத இறுதியில் அல்லது அரையாண்டு முடிவில் வட்டி வரவு வைக்கப்படும். 10,000 ரூபாய் வரை கிடைக்கும் வட்டிக்கு வரி கிடையாது. அதற்கு மேல் வரும் வட்டிக்கு உங்கள் வரி அடுக்குக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.

வைப்பு நிதித் திட்டங்களில் சமீபகாலமாக 7 சதவீதம் வரை வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த வாரம் நடைபெறவிருக்கும் பணக்கொள்கைக் குழு சந்திப்பில் மேலும் கால் சதவீதம் வட்டி குறைப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அது வந்தது என்றால், வைப்பு நிதிக்கான வட்டி குறையக்கூடும்.

அமெரிக்க அதிபர் அறிவிப்புகளால், பங்குச் சந்தை விழுந்துகொண்டிருக்கிறதே? மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி.யை நிறுத்திவிடலாமா?



ஜெ. பாலசுப்பிரமணியன்,

தரமணி.


கூடாது. கூடுதலாக முதலீடு செய்ய இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது. கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள். டொனால்டு டிரம்ப் தேர்ந்த வணிகர். மற்றவர்களை வழிக்குக் கொண்டு வரும் உத்தி அறிந்தவர்.

இப்படிக் கடுமையாக இறக்குமதி வரி விதிப்பதன் மூலம், உலக நாடுகளின் தலையில் ஓங்கி குட்டியிருக்கிறார். இது தான் அதிகபட்ச வலியாக இருக்கும்.

இனிமேல், ஒவ்வொரு நாடும், அமெரிக்காவோடு பேச்சு நடத்தி, தங்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியைக் குறைக்கும் வழிமுறைகளை தேடத் துவங்கும். ஆறு மாதம் அல்லது ஓராண்டில், மீண்டும் எல்லோரும் ஒரு சமநிலைக்கு வருவர்.

அப்புறம் மீண்டும், பங்குகளும் அவற்றைச் சார்ந்த மியூச்சுவல் பண்டுத் திட்டங்களும் நல்ல வளர்ச்சி அடையும். அதனால், இந்த நேரத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வாருங்கள்.

எந்த வங்கி ஏ.டி.எம்.,மிலும் எத்தனை முறை பணம் எடுத்தாலும், சேவை கட்டணம் பிடித்தம் யாருக்கு கிடையாது?



வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.


அப்படிப்பட்ட சலுகை எந்த தனிநபருக்கும் இந்தியாவில் இல்லை. சேவைக் கட்டணம் ஒரு பெரிய தொல்லையாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் எல்லோரும் வங்கிக்குப் போய் பணம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

வாடிக்கையாளர்களைக் கையாள போதுமான பணியாளர்களை நியமிக்க முடியவில்லை, அது சிக்கனமான வழிமுறையில்லை என்று கருதித் தான் ஏ.டி.எம்.,கள் அறிமுகம் செய்யப்பட்டன.

எந்தப் பரிவர்த்தனையானாலும் ஏ.டி.எம்.,மைப் பயன்படுத்திக்கொள்ள வங்கிகள் ஊக்குவித்தன. படிப்படியாக, பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதோடு, இப்போது 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்., பயன்படுத்தினால் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் 21ல் இருந்து 23 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனி ஏ.டி.எம்., தேவையா? அவற்றை ஒருங்கிணைத்து, கேந்திரமான இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஏ.டி.எம்.,களை நிறுவினால் என்ன? அதன் வாயிலாக செலவினங்களைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று யோசிப்பதை விட்டு விட்டு, சேவைக் கட்டணத்தை உயர்த்துவது, வங்கிகளுக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம். வாடிக்கையாளர்கள் பயந்து ஓடிவிடுவர்.

இனிமேல் பழைய முறையைப் பின்பற்றி, வங்கிக் கிளைக்கே போய் நிற்க வேண்டியது தான்.

பேங்கில் டிபாசிட்டுக்கான ஆட்டோ ஸ்வீப் சேவை பற்றி தெரிவிக்கவும்.



ராம லக்ஷ்மணன், கோவை.

உங்கள் சேமிப்புக் கணக்கில், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் உபரியாக பணம் இருந்தால், அதை வைப்பு நிதிக்கு மாற்றுவதையே ஆட்டோ ஸ்வீப் என்று அழைப்பர். இந்த வசதியை பல வங்கிகள் தருகின்றன. நீங்கள் வங்கிக்குப் போய் வைப்பு நிதிக் கணக்கைத் துவங்க வேண்டும்.

வங்கி, உங்களுடைய சேமிப்புக் கணக்குக்கு ஒரு வரையறை உருவாக்கும். அதற்கு மேல் சேமிக்கப்படும் தொகை, வைப்பு நிதிக்கு மாற்றப்படும். சேமிப்புக் கணக்கை விட, வைப்பு நிதித் திட்டம் கூடுதல் வட்டி ஈட்டித் தரும் என்பதால், இந்தத் திட்டத்தை பலரும் பயன்படுத்துகின்றனர்.

கடந்த 2021ல், பொதுத் துறை வங்கியில், பிரதம மந்திரி மைக்ரோ புட் பிராசசிங் எண்டர்பிரைசஸ் திட்டத்தின் வாயிலாக கடன் பெற்றிருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, முழுமையாக கடன் தொகையை வட்டியுடன் செலுத்திய பின்பும், மத்திய, மாநில அரசுகள் அறிவித்த மானிய தொகையை விடுவிக்காமல் உள்ளன. என்ன செய்வது?



க.உதயகுமார், வாட்ஸாப்

உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் தொடர்பு எண்கள் இவை: 92549 97101, 92549 97102, 92549 97103, 92549 97104, 92549 97105. இ - மெயில்: support-pmfme@mofpi.gov.in. தொடர்புகொண்டு விபரம் கேட்டுப் பாருங்கள்.

பி.பி.எப்.,ல் எத்தனை பேரை நாமினியாக பதிவு செய்யலாம்?



உஷா பாஸ்கரன், திருவள்ளூர்.

சமீபத்தில் அரசு சேமிப்பு ஊக்குவிப்பு பொது விதிகள் 2018ல் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் படி, நான்கு பேர்வரை நாமினிகளாக நியமனம் செய்யலாம். மேலும், இத்தகைய நாமினி விபரங்களை மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ வங்கிகளும் அஞ்சலகமும் 50 ரூபாய் கட்டணம் வசூலித்தன. அந்தக் கட்டணமும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.


மேலே சொன்ன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம், அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கும் இது பொருந்தும்.


வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.



ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.



ஆர்.வெங்கடேஷ்



pattamvenkatesh@gmail.com ph98410 53881

Advertisement