மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் பாதுகாப்பு சான்று தர ஏ.இ.,க்கு அதிகாரம்
சென்னை: பிரதமரின் சூரிய வீடு இலவச மின் திட்டத்தின் கீழ், வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்கு, பாதுகாப்பு சான்று வழங்கும் அதிகாரத்தை, உதவி பொறியாளரான, ஏ.இ.,க்கு வழங்கி மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதை ஊக்குவிக்க, பிரதமரின் சூரிய வீடு இலவச மின் திட்டத்தை, மத்திய அரசு 2024 பிப்ரவரியில் துவக்கியது.
இத்திட்டத்தின் கீழ், 1 கிலோ வாட் திறனில் மின் நிலையம் அமைக்க, 30,000 ரூபாயும், 2 கிலோ வாட்டிற்கு, 60,000 ரூபாயும், அதற்கு மேல் அமைத்தால், 78,000 ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது.
மின் நிலையம் அமைக்க, மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உற்பத்தியாகும் மின்சாரத்தை உரிமையாளர் பயன்படுத்தியது போக, மின் வாரியத்திற்கும் விற்கலாம்.
எனவே, மின் நிலையம் அமைப்பதற்கு தொழில்நுட்ப சாத்தியக்கூறு மற்றும் பாதுகாப்பு சான்றுக்கு, மின் வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.
மின்சார ஒழுங்குமுறை ஆணைய அறிவுறுத்தலின்படி, 10 கிலோ வாட் வரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, சாத்தியக்கூறு ஒப்புதல் பெறுவதில் இருந்து, மின் வாரியம் ஏற்கனவே விலக்கு அளித்து விட்டது.
பாதுகாப்பு சான்று வழங்கும் அதிகாரம், உதவி செயற்பொறியாளரிடம் உள்ளது. நான்கு பிரிவு அலுவலகங்களுக்கு தலா, ஒரு உதவி செயற்பொறியாளர் உள்ளனர்.
இதனால், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்து, பாதுகாப்பு சான்று வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, இந்த சான்று வழங்குவதற்கான அதிகாரத்தை, பிரிவு அலுவலக ஏ.இ., அதாவது, உதவி பொறியாளருக்கு வழங்கி மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், விரைவாக ஆய்வு செய்து, பாதுகாப்பு சான்று வழங்கப்படும் என்பதால், மின் நிலையம் அமைக்கும் பணிகளும் வேகமெடுக்கும்.
தமிழகத்தில் பிரதமரின் திட்டத்தில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 30,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதில், இதுவரை 23,500 வீடுகளில், 125 மெகா வாட் திறனில் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும்
-
அங்கன்வாடியில் 127 காலி பணியிடம் வரும் 23க்குள் விண்ணப்பம் வரவேற்பு
-
மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் தீ மிதி விழா
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீராமர் - சீதா திருக்கல்யாண விழா
-
ஆயிரம் சந்தேகங்கள் : சந்தை சரிகிறதே, எஸ்.ஐ.பி.,யை நிறுத்தி விடலாமா?
-
தியேட்டரில் அஜித் பட கட் அவுட் சரிந்து விழுந்தது
-
மழையால் குளுமையானது 'கொடை'