பெங்களூரின் 'குருவி மனிதன்' எட்வின் ஜோசப்

நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும், குடும்ப மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான அறிகுறியாகவும் குருவி பார்க்கப்படுகிறது. வீட்டில் தெற்கு திசையில் குருவி கூடு கட்டினால் பொருளாதாரம் மேம்படும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

குருவிகளால் இவ்வளவு நன்மை இருந்தாலும், அழிந்து வரும் பறவைகளில் குருவிகள் இருப்பதை தடுக்க யாரும் நடவடிக்கை எடுக்காதது ஒரு பக்கம் வேதனையாக உள்ளது.

இந்நிலையில் குருவிகளை பாதுகாக்கும் குருவி மனிதனாக உள்ளார் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்.

கீச்...கீச்...



பெங்களூரின் லிங்கராஜபுரம் மேம்பாலத்திற்கு அருகில் அமைந்துள்ளது கோஸ்பல் தெரு. இந்த தெருவில் வசிப்பவர் எட்வின் ஜோசப். இவர் தனது வீட்டை முழுக்க, முழுக்க குருவிகளுக்காக அர்ப்பணித்துள்ளார். குருவிகளுக்கு தேவையான உணவு, தண்ணீரை வழங்குகிறார்.

எட்வின் ஜோசப் வீட்டை கடந்து செல்வோர், குருவிகளின் கீச்...கீச் சத்தத்தை கேட்டப்படி செல்கின்றனர். சிலர் வீட்டிற்குள் வந்து குருவிகளை பார்த்து ஆச்சரியப்பட்டு செல்கின்றனர்.

குருவிகளை பாதுகாப்பது குறித்து எட்வின் ஜோசப் கூறியதாவது:

மத்திய அரசு நிறுவனமான பி.இ.எம்.எல்.,லில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். நான் அங்கு வேலைக்கு சேர்ந்தபோது 6,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தோம். தற்போது 1,500 முதல் 2,000 பேர் தான் உள்ளனர்.

எனக்கு கிரிக்கெட்டில் மிகவும் பிடித்தவர் ரோஜர் பின்னி. அவர் சிறந்த விளையாட்டு வீரர். எனக்கும் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி விளையாட்டுகளின் மீது ஆர்வம் உள்ளது.

சிறிய கூண்டுகள்



இயற்கை, பறவைகளை அதிகம் நேசிக்கிறேன். என் மனைவி அரிசியை சுத்தம் செய்து, அதில் இருந்து வீசும் குருணைகளை சாப்பிட ஏராளமான குருவிகள் பறந்து வரும்.

வீட்டில் தொட்டியில் இருக்கும் தண்ணீரை குடித்துவிட்டு பறந்து செல்லும். மனிதர்களுக்கு வாழ வீடு, சாப்பிட உணவு தேவைப்படுகிறது. அதுபோல தான் குருவிகளுக்கும் தேவைப்படும் என்று நினைத்தேன்.

மனைவியிடம் கூறி விட்டு வீட்டில் குருவிகள் வசிக்க சிறிய கூண்டுகள் அமைத்தேன். அங்கு வந்து வசிக்கும் குருவிகளுக்கு தினை உணவாக அளித்தேன். முதலில் குருவிகளுக்கு அடைக்கலம் கொடுத்த போது, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் என்னை பைத்தியகாரர் என்ற மனநிலையில் பார்த்தனர். ஆனால் இப்போது அனைவரும் பாராட்டுகின்றனர்.

என் வீட்டிற்கு வந்து குருவிகளை பார்த்து செல்கின்றனர். உலக குருவிகள் தினத்தின்போது மட்டும் குருவிகளை பற்றி பேசுவதை விட, அனைத்து நாட்களிலும் குருவிகளுக்காக மனிதர்கள் பேச வேண்டும். அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் இருந்து குருவியை பாதுகாக்க வேண்டும். என்னால் முடிந்த வரை குருவிகளை பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 எட்வின் ஜோசப் தொடர்புக்கு: 91414 41890.

Advertisement