சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி தாமதம்:ஏரிகள் நடுவே துாண்கள் அமைப்பதில் சிக்கல்

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணியில், உயர்மட்ட பாலத்திற்கு இணைப்பு ஏற்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. அதனால், பணி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையில் இருந்து பெங்களூரு வரை, தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல, ஏழு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.

பயண நேரத்தை குறைப்பதற்காக, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை, ஒஸ்கேட்டே வழியாக பெங்களூருக்கு செல்வதற்கு, அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த சாலை அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து நான்கு மணி நேரத்தில், பெங்களூரு சென்றடையலாம்.

இச்சாலை பணிக்கு, 7,406 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில், 3,477 கோடி ரூபாய் கட்டுமான பணிக்கும்; 3,929 கோடி ரூபாய் நில எடுப்பிற்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

புதிய அதிவிரைவு சாலைக்கு, 2022ம் ஆண்டு பிப்., மாதம் மண் மாதிரி சேகரிக்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் செய்தனர்.

முதற்கட்டமாக, கூத்தவாக்கம் ஏரி, மேல்பொடவூர், மணியாட்சி, கோவிந்தாவடி ஏரி ஆகிய இடங்களில் உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணிகள் நடக்கின்றன.

இதையடுத்து, உயர்மட்ட பாலங்கள் மற்றும் அந்த உயரத்திற்கு ஏற்ப, மண் சாலை அமைக்கும் பணியை, அந்தந்த சாலை பணிக்கு ஒப்பந்தம் எடுத்தோர் செய்து வருகின்றனர்.

சித்துார் - ராணிப்பேட்டை வரை; ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் - காஞ்சிபுரம் வரை; காஞ்சிபுரம் - திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வரையில், 105 கி.மீ., துாரம் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், 76.26 கி.மீ., துாரம் சாலை போடும் பணி நிறைவு பெற்று உள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் முதல், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார் வரை, கடந்த மார்ச் மாதம் இறுதியில், சாலை பணி முடித்திருக்க வேண்டும்.

அதாவது 25.5 கி.மீ., பணியில், 11.25 கி.மீ., முடிந்துள்ளது. இதற்காக 450 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. எஞ்சிய பணிகளுக்கு, 550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இப்பணியில், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், மகேந்திரவாடி, உளியநல்லுார்; காஞ்சிபுரம் மாவட்ட கோவிந்தவாடி, காட்டுப்பட்டூர் ஆகிய ஏரிகளில் தண்ணீர் இருப்பதால், அங்கே துாண்கள் அமைக்கும் பணி மட்டுமே முடிந்துள்ளன.அவற்றை இணைப்பதற்கான பணி முடியவில்லை.

அதனால், பணிக்கான அவகாசத்தை நீட்டித்து தரும்படி, ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட அலுவலகத்திற்கு கடிதம் எழுதியது. இதையடுத்து அத்துறை, பணி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அனுமதி வழங்கி உள்ளது.

இதற்கான காரணம் குறித்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க அதிகாரிகள் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவிந்தவாடி, காட்டுப்பட்டூர் ஏரிகள் நடுவே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. அதற்காக பில்லர் அமைத்து, அதை தொடர்ந்து வேறு சில நடக்க வேண்டியிருந்தது. அப்போது பெய்த வடகிழக்கு பருவமழையால், அப்பணி முடியவில்லை.

தற்போது, ஏரியில் தண்ணீர் இருப்பதால், பணி மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. தண்ணீரை வெளியேற்றினால், அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும்.

அதனால், கோடை காலம் துவங்கி தண்ணீர் வற்றிய பின், பில்லர் மீது ராட்சத கான்கிரீட் கட்டுமானம் பொருத்தி, இணைப்பு ஏற்படுத்தப்படும். அதற்காக, கூடுதலாக ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏரி தண்ணீரால் சிக்கல்

மகேந்திரவாடி, உளியநல்லுார், கோவிந்தவாடி, காட்டுப்பட்டூர் ஆகிய ஏரிகளில், உயர்மட்ட பாலம் அமைக்க, ராட்சத துாண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மீது, ரெடிமேட் கான்கிரீட் கட்டுமானத்தை, ராட்சத கிரேன் வாகனங்களின் வாயிலாக துாக்கி, பில்லர்கள் மீது வைத்து, இணைப்பு சாலை ஏற்படுத்த வேண்டும்.

தற்போது, மேற்கண்ட ஏரிகளில் தண்ணீர் இருப்பதால், ராட்சத வாகனங்களை ஏரியினுள் இறக்கி, கான்கிரீட் துாண்களை எடுத்து வைக்க முடியவில்லை. கோடை துவங்கி தண்ணீர் குறைந்த பின், அப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

- தனியார் ஒப்பந்த நிறுவனம்

மகேந்திராவாடி,

ராணிப்பேட்டை மாவட்டம்.




பணிகள் முடிந்த விபரம்




திட்டம் மொத்த துாரம் முடிக்கப்பட்ட துாரம்


சித்துார்- - ராணிப்பேட்டை 24 கி.மீ., 21.87 கி.மீ.,


வாலாஜாபேட்டை- - அரக்கோணம் 24.5 கி.மீ., 23.69


சோளிங்கர்- - காஞ்சிபுரம் 25.5 கி.மீ., 11.25


காஞ்சிபுரம்- - திருவள்ளூர் 31.70 கி.மீ., 19.45

Advertisement