சிந்தனைக்களம்: பவன் கல்யாணின் ஹிந்து ஆதரவு அவதாரம் ஏன்?

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த படங்களில், 'கிளைமாக்ஸ்' எப்படி இருக்கும் என்பதை இடைவேளைக்கு முன்பே அவருடைய ரசிகர்கள் பெரும்பாலும் யூகித்து விடுவர். அதுபோலவே, தன் அரசியல் நடவடிக்கைகளிலும், அவருடைய எதிர்கால திட்டம் என்ன என்பதை தற்போதே யூகிக்க முடிகிறது.
ஆந்திராவில் மிகப்பெரிய திரை குடும்பத்தில் பிறந்தவர் கல்யாண். தற்காப்புக் கலைகளை கற்ற அவருக்கு, கராத்தே சங்கம் சார்பில், 'பவன்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. ரசிகர்கள் அவரை, 'பவர் ஸ்டார்' என அழைக்கின்றனர்.
தற்காப்பு கலைகள் கற்றவர் என்பதால், அவருடைய படங்களில் அதிரடி சண்டைக் காட்சிகள் இருக்கும். சுற்றிச் சுழன்று சண்டைக் காட்சிகளில் நடிப்பதால், பெரிய அளவு ரசிகர் கூட்டத்தை ஈர்த்தார்.
தன் அண்ணனும், தெலுங்கு நடிகருமான சிரஞ்சீவி துவங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியில் பணியாற்றினார். அந்தக் கட்சியை, காங்கிரசுடன் இணைத்தார் சிரஞ்சீவி. உள்ளுக்குள் உள்ள அரசியல் தீ மேலும் பற்றிக் கொண்ட நிலையில், ஜனசக்தி என்ற கட்சியை, 2014ல் துவக்கினார் பவன் கல்யாண்.
ஆந்திராவில் தற்போது, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பா.ஜ., மற்றும் ஜனசேனா கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதில், துணை முதல்வராக பவன் கல்யாண் உள்ளார்.
கியூபா புரட்சியாளரான சேகுவேராவின் தீவிர ரசிகராக இருந்த பவன் கல்யாண், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீதும் ஈடுபாடுடன் இருந்தார். ஆனால், தற்போது அவர் முழுக்க முழுக்க சனாதனியாக மாறியுள்ளார்.
காவி உடை அணிந்து கோவில்களுக்கு செல்வது, யாத்திரை செல்வது, உபவாசம் இருப்பது என, சனாதன தர்மத்தை தீவிரமாக பின்பற்றுவோரை மிஞ்சும் வகையில், இவரது நடவடிக்கைகள் உள்ளன.
பவன் கல்யாணின் இந்த ஹிந்து ஆதரவு நடவடிக்கைகளுக்கும் சில காரணங்கள் உள்ளன.
வரும் 2029ல், ஆந்திரா சட்டசபைக்கு நடக்கும் தேர்தலே அவருடைய இலக்கு. சந்திரபாபு நாயுடுவின் முதல்வர் நாற்காலியே அவரது குறி. இதை முன்வைத்தே, அவர் தீவிர சனாதனியாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் தற்போது அமைச்சராக உள்ளார். தனக்கு, ஏற்கனவே சினிமா பின்னணி உள்ளதால், அவரை மிஞ்சி செயல்பட்டால், அடுத்த தேர்தலில் இலக்கை எட்ட முடியும் என்பது பவன் கல்யாணின் கணக்கு.
அதுபோல, கூட்டணியில் உள்ள பா.ஜ.,வையும் சமாளித்து, அதை தன் ஆதரவு கட்சியாக வைத்து ஆட்சியைப் பிடிப்பது அவரது வியூகம்.
திருப்பதி கோவில் லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. உடனடியாக கடந்த ஆட்சியில் நடந்த இந்த பாவச் செயல்களுக்கு பரிகாரம் தேடும் வகையில், 11 நாள் உபவாசத்தை அறிவித்தார். காவி உடை அணிந்து, திருப்பதி மலையில் பாதயாத்திரை சென்றார்.
ஏற்கனவே, வராஹி தீட்சா என்ற பெயரில், வராஹி அம்மனை வேண்டும் வகையிலும் உபவாசம் இருந்துள்ளார். சனாதன தர்மத்தை பாதுகாக்கும் வகையில், வராஹி பிரகடனத்தையும் அறிவித்தார்.
இதைத் தவிர, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு யாத்திரை சென்றார்.
சனாதன தர்ம பரிஷத் என்ற தேசிய அளவிலான அமைப்பை உருவாக்கி, மாநிலங்களில் கிளைகளை துவக்கி, ஹிந்து தர்மத்தை காக்கப் போவதாகவும் அறிவித்தார். திருப்பதியில், வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய நாள் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உடனடியாக சிறப்பு விமானத்தில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு அவசர கூட்டத்தை நடத்தி ஆலோசனை நடத்திய நிலையில், அதில் பங்கேற்காமல், நேரடியாக திருப்பதி சென்றார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போல், ஆந்திராவின் யோகி ஆதித்யநாத்தாக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பவன் கல்யாண் தீவிரமாக உள்ளார்.
இதன் வாயிலாக, சந்திரபாபு நாயுடுவை முந்துவதுடன், எதிர்காலத்தில் பா.ஜ.,வை தன் ஆதரவு கட்சியாக வைத்துக் கொள்ள பவன் கல்யாண் முயற்சிக்கிறார்.
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேரும் முயற்சியில் பா.ஜ., உள்ளது. அதுபோல, தன்னுடனும் பா.ஜ., வரும் என்று அவர் நம்புகிறார்.
தன் திரை வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்களை பவன் கல்யாண் சந்தித்துள்ளார்.
அதுபோன்று அரசியல் வாழ்க்கையில் அவருக்கு சிறிய சறுக்கல் ஏற்பட்டாலும், தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை.
அரசியல் பெருங்கடலில் எதிர்த்து வரும் அலைகளை சமாளித்து எதிர்நீச்சல் போட்டவர்; நீண்ட அனுபவம் உள்ளவர் சந்திரபாபு நாயுடு. அதுபோலவே, தேர்தல் மிஷினாக உருவாகியுள்ள பா.ஜ.,வின் அரசியல் வியூகங்கள் எப்படி இருக்கும் என்பதை தற்போது யூகிக்க முடியாது.
அதனால், ஓவராக நடிக்காமல், தன் பாத்திரத்துக்கு ஏற்ப நடிப்பதே பவன் கல்யாணுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
கே.ஸ்ரீதர் ராவ், பத்திரிகையாளர்.




மேலும்
-
அமெரிக்காவின் வரி உயர்வை சமாளிப்பது எப்படி? ஏற்றுமதியாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை
-
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; முதியவர் 'போக்சோ'வில் கைது
-
வங்கி வேலை நாள் அறிவிப்பு; தொழில் வர்த்தக சபை வரவேற்பு
-
56வது வார்டுக்கான ஓட்டுச்சாவடி பட்டியல்
-
அண்டா மாயம்; மோர் நிறுத்தம்
-
அம்மன் நகர் பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா