பொது ரூ.39.50 லட்சம் மோசடி ராணிப்பேட்டை நபர் கைது

ஆவடி:ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமுதா, 39. இவருக்கு கடந்தாண்டு மே மாதம், ராணிப்பேட்டை, திரு.வி.க., நகரைச் சேர்ந்த குப்பன் என்கிற பிரவின்ராஜ், 54, அறிமுகமாகியுள்ளார்.
இவர், 'பிரேமா என்பவருடன் இணைந்து, ஆவடி, காமராஜ் நகர் பிரதான சாலையில், 'கே.பி.என் கிராண்ட் டிரஸ்டட் மணி' என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும், அவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும்' என, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பிய அமுதா, ஸ்டார் பிளானில் 17 லட்ச ரூபாய், பூஸ்டர் பிளானில், 22.50 லட்சம் ரூபாய் என, 39.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். வேறு பலரும் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில், முதலீடு பணத்துடன் குப்பன் மற்றும் பிரேமா ஆகியோர் தலைமறைவாகினர்.
இந்த நிலையில், இருவரும் திருவொற்றியூரில் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, முதலீடு செய்து ஏமாந்தவர்கள், கடந்த 3ம் தேதி இரவு அங்கு சென்றுள்ளனர். அவர்களை கண்டதும் பிரேமா தப்பிவிட குப்பன் பிடிபட்டுள்ளார். அவரை 4ம் தேதி காலை, ஆவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆவடி குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.