குமாரசாமிக்கு நில ஆவணங்கள் வழங்க உத்தரவு

பெங்களூரு : நில ஆக்கிரமிப்பு வழக்கு தொடர்பாக, மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு நில ஆவணங்கள் வழங்க, ராம்நகர் தாசில்தாருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி. இவருக்கு சொந்தமான பண்ணை வீடு ராம்நகரின் பிடதி கேத்தகானஹள்ளியில் உள்ளது. இந்த வீட்டை சுற்றியுள்ள 14 ஏக்கர் அரசு நிலத்தை குமாரசாமி, அவரது உறவினர்கள் ஆக்கிரமித்ததாக கூறப்படுவது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.

நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு நிலங்களை, கடந்த மாதம் வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், 'நிலம் தொடர்பான சில ஆவணங்கள், ராம்நகர் தாசில்தாரிடம் உள்ளன. அந்த ஆவணங்களை சரிபார்ப்பதற்காக, தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்றத்தில் குமாரசாமி மனுத்தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை நீதிபதி சஞ்சய் கவுடா முன்னிலையில் நேற்று நடந்தது.

குமாரசாமி தரப்பு வக்கீல் உதய் ஹொல்லா வாதிடுகையில், ''நில ஆவணங்களை சரிபார்க்க சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க உரிமை உள்ளது. இதற்காக கர்நாடக நில வருவாய் சட்டம் 1964ல் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும்,'' என்றார்.

அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கிரண் ரோனா வாதிடுகையில், ''நிலம் ஆக்கிரமிப்பு வழக்கில் மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க தடை உள்ளது. இந்த நேரத்தில் அவர் ஆவணங்களை கேட்பது சரியல்ல,'' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சஞ்சய் கவுடா, ஒரு வாரத்தில் குமாரசாமியிடம் நில ஆவணங்களை வழங்குமாறு, ராம்நகர் தாசில்தார் தேஜஸ்வினிக்கு உத்தரவிட்டார். நில ஆவணங்களை சரிபார்த்து ஏதாவது குளறுபடி இருந்தால், இரண்டு வாரத்திற்குள் தாசில்தார் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி, குமாரசாமிக்கும் உத்தரவிட்டார்.

Advertisement