குடிநீர் பாட்டில்களில் 50 சதவீதம் தரமற்றவை

பெங்களூரு : கர்நாடகாவில் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 50 சதவீத குடிநீர் பாட்டில்கள் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டு உள்ளது.

பச்சை பட்டாணி, ஐஸ்கிரீம், பன்னீர், தர்பூசணி உள்ளிட்டவற்றில் செயற்கை நிறமூட்டும் நிறமிகள் கலக்கப்படுவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பொது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்நிலையில், உணவுத்துறை அதிகாரிகள், நகரின் பல பகுதிகளில் விற்க கூடிய குடிநீர் பாட்டில்களை சேகரித்து, அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல நிறுவனங்களின் பாட்டில்களில் உள்ள தண்ணீர் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டது. இந்த தண்ணீரில் குறைந்த அளவு தாதுக்கள், தீங்கு விளைவிக்க கூடிய ரசாயனம், பூச்சிக் கொல்லி மருந்துகள், பாக்டீரியாக்கள் ஆகியவை கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.

மாநிலத்தில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் 50 சதவீதம் தரமற்றவை. இது மட்டுமின்றி பிளாஸ்டிக் பாட்டில்களும் தரமற்றவையாக உள்ளன. போலி நிறுவனங்கள் பெயரில் குடிநீர் விற்பது அதிகமாக உள்ளது. பேக்கரிகளில் விற்கப்படும் பால்கோவாவிலும் ரசாயனம் கலக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:

மாநிலத்தில் பிப்ரவரியில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து 280 குடிநீர் பாட்டில்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 257 பாட்டில்களில் சோதனைகள் நிறைவு செய்யப்பட்டன. இவற்றில், 89 பாட்டில் நீரை குடிப்பது பாதுகாப்பானது; 89ல் உள்ள தண்ணீர் பாதுகாப்பற்றது; 79ல் உள்ள தண்ணீர் தரமற்றவை என கண்டறியப்பட்டு உள்ளது.

எனவே, தரமற்ற, பாதுகாப்பற்ற தண்ணீர் பாட்டில் நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இச்சோதனையில் உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களின் தண்ணீர் பாட்டில்களின் தரம் குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் தண்ணீர் பாட்டில்களை ஒப்பிடும்போது, மிகவும் மோசமாக இருக்கிறது. இதன் மூலம் மாநிலத்தில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்களில் 50 சதவீதம் தரமற்றவை என தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement