கொடைக்கானல் விடுதிகள் உணவகங்களில் இல்லை பார்க்கிங்; சாட்டையை சுழட்டுவாரா திண்டுக்கல் கலெக்டர்

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள விடுதிகள் ,உணவகங்களில் பார்க்கிங் வசதியை கட்டாயப்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலில் தீராத பிரச்னையாக இருப்பது போக்குவரத்து நெரிசல்.இதற்கு தீர்வு ஏற்படுத்த அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் எடுத்த போதும் ஏனோ நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.இதற்கு காரணம் நகரில் உள்ள விடுதிகள், உணவகங்களில் பார்க்கிங் வசதியில்லாததே. வணிக நோக்கில் கட்டமைக்கப்பட்ட உணவகம், விடுதிகளில் பார்க்கிங் வசதி என்பது கட்டாயமாக கட்டுமான விதிகளில் உள்ளது. இருந்த போதும் நகராட்சி அதிகாரிகள் இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது கவனிப்பு பெற்று அனுமதி அளித்துள்ளனர்.இங்கு வருகை தருவோர் தங்களது வாகனங்களை ரோட்டில் நிறுத்துவது, உணவகம் ,விடுதி அருகில் நிறுத்தும் போக்கு உள்ளதால் நெரிசல் ஏற்படுகிறது.

தற்போது நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பல்வேறு உள்கட்டமைப்புகளை அமைத்து மாவட்ட நிர்வாகம் மாத்தி யோசித்து வருகிறது. இதில் முக்கியமாக பார்க்கிங் வசதியை மேம்படுத்தும் திட்டத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக இங்குள்ள விடுதிகள், உணவகங்களில் பார்க்கிங் வசதியை கட்டாயமாக ஏற்படுத்த திண்டுக்கல் கலெக்டர் சரவணன் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இதற்கு தீர்வு ஏற்படும்.

இதற்காக நகராட்சி நிர்வாகம் தனிக்குழு அமைத்து பார்க்கிங் வசதி இல்லாத வணிக கட்டடங்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொடைக்கானலில் தற்போது மேம்படுத்தப்படும் உள்கட்டமைப்பு வசதியுடன் இந்நடவடிக்கை சேரும் பட்சத்தில் ஓரளவிற்கு போக்குவரத்து நெரிசலைகட்டுப்படுத்தலாம்.

Advertisement