சினிமா
23 ஆண்டுக்கு பிறகு இணைந்த பிரசாந்த்--ஹரி கூட்டணி
2002ல் ஹரி இயக்கிய முதல் படம் 'தமிழ்'. இந்த படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அதையடுத்து 'சாமி, கோவில், ஐயா, சிங்கம்' என பல ஹிட் படங்களை இயக்கிய ஹரி, கடைசியாக விஷால் நடிப்பில் 'ரத்னம்' படத்தை இயக்கியிருந்தார். தற்போது தனது முதல் பட ஹீரோவான பிரசாந்த் உடன் 23 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார் ஹரி. இது பிரசாந்தின் 55வது படமாக உருவாகிறது.
'ஆயிரத்தில் ஒருவன் 2': அப்டேட் தந்த செல்வராகவன்
2010ல் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா நடித்து வெளிவந்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. படம் தோல்வியடைந்தாலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆனபோது ரசிகர்கள் படத்தை கொண்டாடினர். தனுஷ் நடிப்பில் இதன் 2வது பாகம் உருவாகும் என 2021ல் அறிவித்தார் செல்வராகவன். அதன்பின்னர் எந்த அப்டேட்டும் வெளியாக நிலையில், ''ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் தயாரிக்க பெரிய நிறுவனம் இணைந்தால் கண்டிப்பாக உருவாகும். தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் கார்த்தி இல்லாமல் இந்த பாகம் உருவாகாது. இருவரும் ஒரு வருடம் கால்ஷீட் ஒதுக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு வரும் தபு
நடிகை தபு, ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்தவர். தமிழில் கடைசியாக 2000ல் வெளியான 'சிநேகிதியே' படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு படங்களில் இப்போதும் பிஸியாக நடித்து வருகிறார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க இருக்கிறார் தபு. பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது.