லாரி உரிமையாளர்களுக்கு சிவகுமார் எச்சரிக்கை

கனகபுரா : ''வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்து இருக்கும் நிலையில், அரசியல் செய்ய வேண்டாம்,'' என்று லாரி உரிமையாளர்களுக்கு, துணை முதல்வர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கர்நாடகாவில் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அரசுக்கு 14 ம் தேதி வரை, கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்கம் கெடு விதித்து உள்ளது. அதற்குள் விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால், வேலைநிறுத்தம் செய்யவும் முடிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து துணை முதல்வர் சிவகுமார் கனகபுராவில் நேற்று அளித்த பேட்டி:

பெட்ரோல், டீசல் கட்டணம் உயர்த்தப்படுவது ஒன்றும் புதிது இல்லை. கடந்த காலங்களில் மத்திய அரசு உயர்த்திய போது, லாரி உரிமையாளர்கள் ஏன் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை.

இப்போது அரசியலுக்காக செய்கின்றனர். வேலை நிறுத்தம் செய்தால் அவர்களுக்கு தான் இழப்பு. லாரி உரிமையாளர்கள் அரசியல் செய்ய வேண்டாம். வேலை நிறுத்தத்தால் ஏற்படும் இழப்பை அவர்களால் சரி செய்ய முடியுமா.

பிடதியில் டவுன்ஷிப் கட்ட குமாரசாமி முதல்வராக இருந்த போது அறிவிப்பு வெளியானது. பணிகளை அப்படியே விட்டுவிட்டனர். இப்போது டவுன்ஷிப் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எல்லா விஷயத்திலும் அரசியல் செய்வதை குமாரசாமி நிறுத்த வேண்டும்.

கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தால், பிடதியில் டவுன்ஷிப் அமைக்கப்படும். இதற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில், விலை நிர்ணயம் செய்வோம். விவசாயிகளிடம் நான் பேசி உள்ளேன். யாருக்கும் சந்தேகமோ, கவலையோ வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement