அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்: அ.தி.மு.க., பா.ஜ., புறக்கணிப்பு

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து சட்டப்போராட்டத்தை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தை அ.தி.மு.க., பா.ஜ., புறக்கணித்துள்ளது.
நீட் தேர்விற்கு விலக்கு பெறுவது தொடர்பாக ஏப்ரல் 9ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடை பெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன் படி, சென்னையில் இன்று (ஏப்ரல் 09) அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நுழைவுத் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கக் கூடாது. நீட் தேர்வை தொடக்கம் முதலே தி.மு.க., எதிர்த்து வருகிறது. மருத்துவ துறையில் நாட்டுக்கே முன்னோடியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மாணவர்களை வெகுவாக பாதித்து வருகிறது. நீட் தேர்வு மாணவர்களின் உரிமையை பாதித்து வருகிறது. நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடரும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நம்பிக்கை அளிக்கிறது. தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தினால் நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெறலாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
புறக்கணிப்பு
அனைத்துக் கட்சி கூட்டத்தை பா.ஜ., அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது. அதேநேரத்தில், கூட்டத்தில் பா.ம.க., சி.பி.எம். காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
தீர்மானம் நிறைவேற்றம்
நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து சட்டப்போராட்டத்தை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி தீர்மானத்தை வாசித்தார்.







