மத்திய அமைச்சர் ஜித்தன்ராம் மஞ்சி பேத்தி சுட்டுக்கொலை: கணவன் வெறி செயல்

8

காயா: மத்திய அமைச்சர் ஜித்தன்ராம் மஞ்சியின் பேத்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பீஹாரில் நடந்தது.

பீஹாரின் பிரதான கட்சியான ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சி தலைவர் ஜித்தன்ராம் மஞ்சி, இவர் பீஹார் முன்னாள் முதல்வராகவும் இருந்தார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் கயா தொகுதி எம்.பி.யாக தேர்வு பெற்றார். மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராக உள்ளார்.

இவரது மகள் வழி பேத்தி சுஷ்மா தேவி (30), இவரது கணவர் ரமேஷ் சிங், இவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்துள்ளது. சுஷ்மா தேவி கயா மாவட்டம் டெட்டுவா கிராமத்தில் அட்ரி பகுதி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.

சம்பவ நாளான இன்று நண்பகலில் கணவர் ரமேஷ் சிங், சுஷ்மா தேவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இது முற்றியதில் ஆத்திரமடைந்த ரமேஷ் சிங் தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் மனைவி சுஷ்மா தேவி மீது மார்பு, தலையில் சுட்டுவிட்டு தப்பியோடினார்.

குண்டு காயமடைந்த சுஷ்மாதேவியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அட்ரி போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவுந்து தப்பியோடிய கணவர் ரமேஷ் சிங்கை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட எஸ்.பி., விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement