கில் ஏமாற்றம்; சாய் சுதர்சன் 3வது அரைசதம்

ஆமதாபாத்: ராஜஸ்தானுக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில் குஜராத் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
பிரீமியர் லீக் போட்டியின் 23வது லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. ஆமதாபாத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியில் ஹசரங்காவுக்கு பதிலாக பருக்கி சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆட்டம் துவங்கியதுமே குஜராத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கில், வெறும் 2 ரன்களில் ஆர்ச்சர் பந்தில் போல்டானார், இதைத் தொடர்ந்து, முதல் 6 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை குவித்தது. சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய பட்லர் 36 ரன்களில் தீக்ஷானா பந்தில் அவுட்டானார். இருவரும் சேர்ந்து 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.மறுமுனையில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் அரைசதம் அடித்தார். நடப்பு தொடரில் அவருக்கு இது 3வது அரைசதமாகும்.
குஜராத் அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இதுவரையில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி, முதல் போட்டியில் தோல்வியை தழுவியது. அதன்பிறகு, விளையாடிய 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி, முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு, கடைசியாக விளையாடிய இரு போட்டிகளிலும் வென்றுள்ளது. இரு அணிகளும் வெற்றியுடன் தொடர்ந்து வரும் நிலையில், இந்தப் போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.