நான் உயிருடன் இருக்கும் வரை நடக்காது: பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மம்தா ஆறுதல்

11

கோல்கட்டா: "தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் யாரும் வேலையிழக்க மாட்டார்கள். நான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது" என பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முதல்வர் மம்தா உறுதி அளித்துள்ளார்.


மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 25,700 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்கள் 2016ல் நிரப்பப்பட்டன. இதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தகுதியில்லாத நபர்கள் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் ஆனது தெரியவந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த கோல்கட்டா ஐகோர்ட், 2016ல் நியமனம் செய்யப்பட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த ஐகோர்ட் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இது மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

Tamil News
Tamil News
ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பணியிழந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் மம்தா ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக
பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டின.

சுப்ரீம் கோர்ட்டால் பணி நீக்க உத்தரவுக்கு ஆளான ஆசிரியர்களை முதல்வர் மம்தா கோல்கட்டாவில் இன்று (ஏப்ரல் 07) சந்தித்து பேசினார். அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

"அரசு எப்போதும் உங்கள் பக்கம் உள்ளது. திரிணமுல் அரசுக்கு எதிராக திட்டமிட்ட சதி நடக்கிறது. பணி நியமனம் பெற்ற அனைவரும் தகுதி வாய்ந்தவர்கள். அவர்களில் பலர் கோல்டு மெடல் வென்றவர்கள். இத்தனை ஆண்டுகள் பணியாற்றி, தகுதியுடைய மாணவர்களை உருவாக்கி உள்ளனர்.


இப்படியிருக்கையில், அப்படிப்பட்ட ஆசிரியர்களை தகுதியற்றவர்கள் என்பதில் நியாயமில்லை. சுப்ரம் கோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் யாரும் வேலையிழக்க மாட்டார்கள். தான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது" என மம்தா பானர்ஜி கூறினார்.

Advertisement