கச்சத்தீவு விவகாரத்தில் சட்டசபையில் முதல்வர் தவறான தகவல்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

17

செங்கல்பட்டு: கச்சத்தீவு விவகாரத்தில் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார் என்று அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.



செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அண்ணாமலை நிருபர்களிடம் பேசியதாவது;


எல்லா தமிழக மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில் ஒரு பெரியநாடு, பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிற நாடு, இலங்கைக்கு ரொம்ப நட்பாக இருக்கக்கூடிய நாடு. இந்திய பிரதமர் கோரிக்கைக்கு இலங்கை பிரதமர் செவி சாய்ப்பார்கள் என்பதில் முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


படகையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லி உள்ளனர். எனவே நிச்சயம் இலங்கை அதை கவனத்தில் கொண்டு அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இதை எல்லாம் மறைத்துவிட்டு, முதல்வர் சட்டசபையை தவறாக வழி நடத்தி உள்ளார்.


பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, பத்திரிகையாளர்களுக்கு என்ன பேசினோம் என்பதை பிரதமர் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் இதை மறைத்துவிட்டு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பொய்யை சொல்லி இருக்கிறார் முதல்வர்.


கச்சத்தீவு பற்றி அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்கும் தெரியாது, முதல்வருக்கும் தெரியாது. ஒரு நாட்டின் ரகசிய திட்டங்களை பொதுவெளியில் பேசுவது கிடையாது.


தி.மு.க.,வுக்கு முன்பே எங்களின் நிலைப்பாடு கச்சத்தீவை திரும்ப கொண்டு வரவேண்டும் என்பது தான். ஆகவே முதல்வர் அவர்கள் எங்களுக்கோ, பிரதமருக்கோ கச்சத்தீவு பற்றி பாடம் எடுக்க வேண்டாம்.


கச்சத்தீவு இன்று இன்னொரு நாட்டின் சொத்து. கத்தியைக் காட்டி, துப்பாக்கி முனையில் அதை கொண்டு வரமுடியாது. தமிழகத்தின் இந்த கோரிக்கையை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வைத்து இருக்கிறோம்.


எனது செருப்பை கழட்டி நான்கு மாதம் ஆகி விட்டது. காரணம் என்ன, தி.மு.க., ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என்பதற்காக செருப்பை தூக்கி எறிஞ்சு 4 மாசம் ஆச்சு. ஆகவே களத்தில் இருந்து போராட போகிறேன். எனது நேரம் முழுவதுமே களத்தில் இருக்கப்போவது.


அதிகம் பயணம் இருக்கப்போகிறது. மக்களோடு மக்களாக இன்னும் அதிகமான பணிகள். இந்த மாநிலத்தலைவர் என்ற நிறைய பணிகள் எனக்கு இருக்காது. அமைப்பு ரீதியான பணிகள் வேறு ஒருவர் செய்யட்டும். அதுபற்றி எனக்கு சந்தோஷம்தான். அதனால் தான் மாநிலத் தலைவர் என்ற போட்டியில் நான் இல்லை என்று சொன்னேன். காரணம்... களத்திலே இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.களத்தில் இருப்பேன். தொண்டர்கள் யாராக இருந்தாலும் அவர்களோடு சேர்ந்து நான் இருப்பேன்.


தலைவர் பதவி இருப்பதால் யாரும் ஒருவர் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியம் இங்கே யாருக்கும் இல்லை. பதவிகள் வரும், போகும். ஆகவே எல்லாருமே இன்னும் சுறுசுறுப்பாக, வேகமாக, வீரியமாக களத்தில் போராட வேண்டும் என்று தொண்டர்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


தி.மு/க., ஊழலை இன்னும் வீரியமாக, வேகமாக சொல்லத்தான் போகின்றோம். மோடி அய்யாவுக்காக அரசியலுக்கு வந்தவன் நான். அவர் கிணற்றில் குதி என்றால் குதிக்கிற ஆள்நான். நான் ஒரு கட்சியை பார்த்தோ அல்லது சித்தாந்தத்தை பார்த்தோ அரசியலுக்கு வரவில்லை. அது எல்லோருக்கும் தெரியும். நரேந்திர மோடி என்ற ஒற்றை மனிதருக்காக அரசியல் களத்தில் நான் நிற்கிறேன்.


நான் ஒரு கட்சியில் உறுப்பினராக சேர்ந்து கிளைக்கழக தலைவராக சேர்ந்து இந்த கட்சிக்கு வரவில்லை. இந்த கட்சியில் 36 வயசுல நான் ஒரு உறுப்பினராக வந்து சேர்ந்தேன். மோடி அவர்கள் கைகாட்டுவார். இதை செய் என்றால் நான் செய்யப்போகிறேன்.


மோடி அவர்கள் சொல்லும் போது கண்ணை கட்டிக்கொண்டு செயல்படுத்துவது மட்டும் தான் என்னுடைய வேலை. அதனால் மோடி சொல்லுவார்.. நீ தொண்டாக இரு என்றால் இருப்பேன். மோடி என்ன கட்டுப்பாடு விதிச்சாலும் அதை ஏற்று முழுமையாக பணி செய்ய இந்த இயக்கத்துக்கு வந்தேன். அது எப்போதும் தொடரும்.


நான் தேசியத்தில் தமிழை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற நினைக்கின்றேன். சீமான் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். அவருடைய கருத்து சில இடத்தில் மாறுபட்ட கருத்தாக இருக்கலாம். என்னுடைய கருத்து வேற இடத்தில் மாறுபட்டு இருக்கலாம்.


இருந்தாலும்... தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நேர்க்கோட்டில் இருவரின் வார்த்தைகள் ஒரே மாதிரியாக தான் பிரயோகமாக இருக்கு.


இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Advertisement