சட்டத்தை சீர்குலைக்க வேண்டாம்; உ.பி., போலீசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

6


புதுடில்லி: 'சாதாரண சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக பதிவு செய்வதா?' என உ.பி., அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இது சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் செயல் என கண்டித்தது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு நிலம் தொடர்பான பிரச்னை ஒன்றை சிவில் வழக்காக பதிவு செய்வதற்கு பதில், கிரிமினல் வழக்காக போலீசார் பதிவு செய்தனர். இதையடுத்து, ஷரிப் அகமது என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பரில் தீர்ப்புஅளித்தது.

அதில், 'இதுபோன்று கிரிமினல் வழக்குப்பதிவு செய்து, சாதாரண மக்களை அவதிக்கு உள்ளாக்குவது தவிர்க்கப்பட வேண்டும். இது தொடர்பாக, போலீசாருக்கு போதிய அறிவுரைகளை டி.ஜி.பி., வழங்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் தன் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும்' என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தது தொடர்பாக, நொய்டாவைச் சேர்ந்த தீபு சிங், தீபக் சிங் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கை உ.பி., போலீசார் பதிவு செய்தனர்.

அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்ததால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், விஸ்வநாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, உ.பி., போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சிவில் வழக்காக பதிவு செய்தால், வழக்கு முடிவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். விரைவாக முடித்து தண்டனை பெற்றுத் தருவதற்காகவே கிரிமினல் வழக்காக பதிவு செய்யப்படுகிறது' என்றார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டதாவது:

உ.பி.,யில் என்ன நடக்கிறது? ஒவ்வொரு நாளும் சிவில் வழக்குகள் எல்லாம் கிரிமினல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன; இது மிகவும் அபத்தமானது. சட்டத்தின் ஆட்சியை முற்றிலுமாக சீர்குலைக்கும் செயல். இது மிகவும் தவறு.

சிவில் வழக்குகளுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதால், நீங்களே எப்.ஐ.ஆர்., பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கையை துவங்குவீர்களா; உ.பி.,யில் தினமும் விசித்திரமாக நடக்கிறது. பணத்தை திருப்பித் தராமல் இருப்பது கிரிமினல் குற்றமல்ல. இன்னும் சொல்லப்போனால், இது வழக்கே அல்ல.

ஏற்கனவே, இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றவில்லை. இதற்காக, கவுதம புத்த நகர் மாவட்ட விசாரணை அதிகாரியை கூண்டில் ஏற்றி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை துவங்கலாம்.

உ.பி., போலீஸ் டி.ஜி.பி., பிரசாந்த் குமார், நொய்டா போலீஸ் அதிகாரி இருவரும் இரண்டு வாரத்தில் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும். நொய்டா நீதிமன்றத்தில் நடக்கும் கிரிமினல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும், பணம் இல்லாமல் காசோலை திரும்பியது தொடர்பாக வழக்கு தொடரலாம்.

இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

Advertisement