அமைச்சர்கள் வழக்கு: தொடர்கிறது நீதிபதிகள் விலகல்!

45

புதுடில்லி; தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி விலகி உள்ளார்.



2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இருந்தனர். அப்போது இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வழக்குகள் தொடரப்பட்டன.


இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் 2022ம் ஆண்டு விடுவித்தது. ஆனால் அவர்கள் இருவருக்கு எதிரான வழக்குகளை சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறு ஆய்வுக்கு எடுத்தார். கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


இதற்கு எதிராக தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருவரும் மேல் முறையீடு செய்த போது, மறு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந் நிலையில், மறு விசாரணையை எதிர்த்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவித்தார். தாம் இடம்பெறாத அமர்வில் இந்த வழக்கை பட்டியலிடவும் உத்தரவிட்டார். அதே நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் நீதிபதிகள் நீட்டித்து உத்தரவிட்டனர்.

முக்கிய வழக்குகளில் நீதிபதிகள் விலகல்


இதற்கு முன், டாஸ்மாக் முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க தடை கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இருந்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ரமேஷ், செந்தில் குமார் ஆகியோர் மார்ச் 25ல் விலகிக்கொண்டனர்.

போதைப்பொருள் கடத்தல், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான தி.மு.க., நிர்வாகி ஜாபர் சாதிக் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விலகிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. (2024 டிச., 21)


அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கத்துறை வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சுந்தர் விலகிக்கொண்டார். (2023 நவம்பர் 15)


அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகிக்கொண்டார். (2023 ஜூன் 13)

Advertisement