அண்ணாமலை - சீமான் பரஸ்பரம் புகழாரம்; கூட்டணிக்கு அச்சாரமா என சந்தேகம்

1

சென்னை: 'சீமானுக்கும், எனக்கும் பெரிய வித்தியாசம் இல்லை' என சீமானை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை புகழ, பதிலுக்கு சீமான், 'தமிழகத்தில் அண்ணாமலையால் பா.ஜ., வளர்கிறது' என புகழ்ந்தார்.

சென்னை காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனத்தின் தமிழ் பேராயம் சார்பில், 'சொல் தமிழா சொல் - 2025' என்ற பேச்சுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.

இதில், எஸ்.ஆர்.எம்., கல்விக் குழும நிறுவனரும், வேந்தருமான பாரிவேந்தர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆதரவு குரல்



நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:

சீமானை, ஒரு அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பார்க்கவில்லை; போர்க்களத்தில் நிற்கும் தளபதியாக பார்க்கிறேன். கொள்கைக்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்ற நிலைப்பாடோடு இருப்பவர் சீமான். இந்த உறுதிதான், அவரை தனிப்பெரும் தலைவராக உருவெடுக்க வைத்துள்ளது.

எனக்கும், சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழைப் பார்க்கிறேன். அவர், தமிழில் தேசியத்தைப் பார்க்கிறார். அவரது நேர்மைக்கு தான், அவருக்கு ஆதரவாக எப்போதும் நான் குரல் கொடுக்கிறேன்.

தற்போது பேசுவது குறைந்து, சமூக வலைதளங்களில் கருத்தை பதிவிடுவது அதிகரித்து வருகிறது. அதற்கு வலிமை இருந்தாலும், அதைவிட நீங்கள் பேசும்போது வலிமை கூடுகிறது. ஆளுமைமிக்க தலைவர்கள் வந்து அரசியலை திருத்துவர் என்றால், அரசியல் நல்லா இருக்கும்.

தேசிய கட்சிகள், தேசிய பிரச்னையை முதன்மையாகவும், மாநில நலனை முக்கியமாகவும்; மாநில கட்சிகள், மாநில பிரச்னையை முதன்மையாகவும், தேசிய பிரச்னையை முக்கியமாகவும் வைத்தால் மட்டுமே, இந்திய அரசியல் மாறும்.

இக்கட்டான சூழலில் அரசியல் உள்ளது. பிராந்திய கட்சிகளும், தேசிய கட்சிகளும், எல்லையை மீறிச் செல்லும்போது, மக்கள் மாட்டிக்கொண்டு முழிக்கின்றனர். இரண்டு கட்சிகளும், மத்திய பகுதிக்கு வர வேண்டும். நானும், சீமானும் பங்கேற்பதால், இந்நிகழ்ச்சி பேசுபொருளாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆங்கிலம் அறிவல்ல



சீமான் பேசியதாவது:

தமிழகத்தில் பா.ஜ., என்ற ஒரு கட்சி இருக்கிறது; அது வளர்ந்துள்ளது என்பதை, தன் செயல் ஆற்றல்களால் அண்ணாமலை நிரூபித்துக் காட்டியுள்ளார். பெயருக்கு தமிழ்நாடு, ஆனால், இங்கு தமிழ் படிப்பதே பாவம் என்றாகிவிட்டது.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் சுடுகாடு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முன்பு சங்கம் வைத்து தமிழை வளர்த்தனர். தற்போது சங்கம் வைத்து ஜாதியை வளர்க்கிறோம். எல்லாம் நாசமாகி விட்டது. ஆங்கிலம் ஒரு மொழி; அது அறிவல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். தாய்மொழியில் கற்றவன் உலகத்தை கற்கிறான். ஹிந்தி உட்பட நாம் வாழ, உலகத்தின் எம்மொழியையும் கற்போம். ஆங்கிலத்தில் என்ன சிறப்பு இருக்கிறது. தமிழ் மொழியை எடுத்து விட்டால், ஆங்கிலத்தில் சொற்கள் இல்லை.

அதில், 500க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள், நாம் போட்ட பிச்சை.

பிரதமர் மோடி உலகம் முழுதும் செல்கிறார்; அங்கே, உலகின் முதல் மொழி தமிழ். அம்மொழி இந்திய மொழிகளில் ஒன்றாக இருப்பது எங்களுக்கு பெருமை. தமிழ் மொழி தொன்மையானது எனவும் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

நன்கு சிந்தியுங்கள்



தமிழகத்தை ஒரு தமிழன் ஆளும் காலம் வரும். அப்போது, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும். திராவிட மாடலில், ஓட்டுக்கு 500 ரூபாய் என அனைவரும் பின்பற்றுகின்றனர். ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்துங்கள்.

அரசியல், ஒரு வாழ்வியல் என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஐந்தாண்டு கால சக்திதான் தேர்தல். அதனால், தேர்தலுக்கு முன் நன்கு சிந்தியுங்கள். அதன் வழியில் செயல்படுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இப்படி அரசியல் ரீதியில் பல்வேறு கருத்துகளை எடுத்து வைத்து அண்ணாமலையும், சீமானும் பேசினாலும், இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் புகழ்ந்து கொள்ள, இது அரசியல் கூட்டணிக்கு அச்சாரமா என்ற சந்தேகம், அரசியல் வட்டாரத்தில் எழுந்துஉள்ளது.

Advertisement