தமிழகத்தின் நம்பர் ஒன் துரோகி; பழனிசாமியை விமர்சிக்கும் ரகுபதி

4

சென்னை: 'தமிழகத்தின் நம்பர் ஒன் துரோகி யார் எனக் கேட்டால், அரசியல் தெரியாத சிறுவன்கூட பழனிசாமியை கை காட்டுவான்' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:



'யார் அந்தத் தியாகி?' என்ற அ.தி.மு.க., கேள்விக்கு, 'நொந்துபோய் நுாடுல்ஸ் ஆன அ.தி.மு.க., தொண்டர்கள் தான் அந்த தியாகிகள்' என, முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலில், நொந்துபோன பழனிசாமி வீராவேசமாகக் கருத்து சொல்லியிருக்கிறார்.

தியாகியை விடுங்கள். தமிழத்தின் நம்பர் ஒன் துரோகி யார் எனக் கேட்டால், அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட பழனிசாமியை கை காட்டுவான்.

அரசியல் அறத்தை அடகு வைத்துவிட்டு, துரோகங்களை மட்டுமே செய்து முன்னேறியவர் பழனிசாமி. ஜெயலலிதா அருகில் கூனிக்குறுகி நிற்பார்; ஜெயலலிதாவின் கார் டயரை தொட்டு வணங்குவார்.

ஆனால், ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக பா.ஜ.,வின் பாதம் தாங்கியாக மாறி, அவருக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி.

தவழ்ந்து, ஊர்ந்து சென்று நாடகமாடி ஆட்சியை பிடித்த பின், சசிகலாவுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி. திரையில் துரோகத்திற்கு, 'கட்டப்பா' என்றால் தரையில் பழனிசாமிதானே.

சுயநலத்துக்காக, பழனிசாமி எந்த எல்லைக்கும் செல்வார்; எந்தத் துரோகத்தையும் செய்வார் என்பதற்கு பன்னீர்செல்வமும், தினகரனும் நடமாடும் சாட்சிகள். உண்மையில், பழனிசாமியின் சுயரூபம் தெரியாமல், அவரை நம்பி மோசம் போன இவர்கள் தான் அந்த தியாகிகள்.

கள்ளக்கூட்டணியை உறுதிசெய்ய, டில்லியில் அமித் ஷாவை பதுங்கிப் பதுங்கி, கார்கள் மாறி மாறிச் சென்று சந்தித்த பழனிசாமி, தைரியத்தின் விளைநிலமான தமிழக முதல்வரை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.

தன் மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என, நீதிமன்றத்திற்கு ஓடிப்போய் தடையாணை வாங்கிய பழனிசாமி பேசுவது, அத்தனையும் கேலிக்கூத்துதான்.

தமிழகத்திற்கு நிதி தர மறுப்பு, ஹிந்தி திணிப்பு, தொகுதிகள் எண்ணிக்கை குறைப்பு என, பா.ஜ., வரிசையாக துரோகங்களை செய்து சதித்திட்டம் தீட்டி வருகிறது.

கொஞ்சம் கூட வெட்கமின்றி, தமிழக மக்களை பற்றி துளியும் யோசிக்காமல், கூட்டணிக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் பழனிசாமி, தமிழகத்திற்கு துரோகி.

இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

Advertisement