துபாய் பட்டத்து இளவரசர் இந்தியா வருகிறார்; பிரதமர் மோடியை சந்திக்கிறார்!

8

புதுடில்லி: துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் நாளை (ஏப்ரல் 8) இந்தியா வருகிறார். அவர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்கிறார்.


2 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் நாளை (ஏப்ரல் 8) இந்தியா வருகிறார். அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். துபாய் இளவரசருக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார்.


இதையடுத்து ஷேக் ஹம்தான் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா இடையேயான உறவு, வர்த்தகம், தொழில் உள்பட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.


நாளை மறுதினம் இந்தியா - ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர்கள் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திலும் துபாய் பட்டத்து இளவரசர் பங்கேற்க உள்ளார்


ஷேக் ஹம்தான் 2008 ல் துபாயின் இளவரசரானார். அவர் மேலும் ஐக்கிய அமீரக துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் முக்கிய பதவிகளை வகித்து வருகிறார்.


இவர் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் ஷேக்கா ஹிந்த் பின்த் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் ஆகியோரின் இரண்டாவது மகனாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement